×

தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸ்..!! VPF கட்டணம் ரத்து செய்யப்பட்ட 2 வாரத்திற்கு மட்டும் திரைப்படங்களை வெளியிட முடிவு; பாரதிராஜா

சென்னை: VPF  கட்டணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 2 வாரத்திற்கு மட்டுமே புதிய திரைப்படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா கூறியுள்ளார். VPF  கட்டணம் செலுத்தி படங்களை வெளியிடுவதில்லை என்பதில் உறுதியாக உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், புதிய படங்கள் வெளியீட்டில் சிக்கல் நீடித்து வந்தது. VPF கட்டணம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துவிட்டதால், புதிய படங்கள் வெளியீடு இல்லை என முதலில் தயாரிப்பாளர்கள் அறிவித்தார்கள்.

ஆனால் யூ.எஃப்.ஓ மற்றும் க்யூப் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த போட்டியில், இரண்டு நிறுவனங்களுமே நவம்பர் மாதம் மட்டும் VPF கட்டணம் தேவையில்லை என்று அறிவித்துள்ளன. இதனால் புதிய படங்கள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாயின. இது தொடர்பாக நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;  திரைப்படங்கள் தயாரிப்பதே அதை வெளியிடுவதற்காகத்தான். திரைத்துறை சங்கங்கள் இருப்பது அதன் உறுப்பினர்கள் நலனுக்குத்தான். VPF சம்பந்தமான எங்கள் சங்கத்தின் நிலைப்பாட்டை நேற்று தெரிவித்திருந்த நிலையில், ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதையாக, டிஜிட்டல் புரஜொக்ஷன் நிறுவனங்கள் திடீரென்று VPF கட்டணம் தற்காலிகமாக 2 வாரங்களுக்கு இல்லை என அறிவித்திருக்கிறது.

திரையரங்கங்களுடன் எங்களுக்குப் பங்காளிச் சண்டை போன்ற சூழ்நிலை நிலவி வரும் நிலையில், தயாரிப்பாளர்களையோ, திரையரங்கங்களையோ‌ பாதிப்பது எங்கள் நோக்கமல்ல. பிரித்தாலும் சூழ்ச்சியாக டிஜிட்டல் நிறுவனங்கள் VPF கட்டணத்தை விலக்கி இருந்தாலும் அது 2 வாரங்களுக்காவது தயாரிப்பாளர்களுக்குப் பயன்படும் பட்சத்தில் இதை எங்கள் சிறு வெற்றியாகவும் கருதி, VPF கட்டணம் இல்லாத இந்த 2 வாரங்கள் மட்டும் எங்கள் புதிய திரைப்படங்களைத் திரையிட முடிவு செய்துள்ளோம். அதேசமயம் VPF கட்டி படங்கள் திரையிடுவதில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். விரைவில் நல்ல நிலையான தீர்வை எட்டுவதிலும் உறுதியாக உள்ளோம். இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

Tags : Deepavali ,Bharathiraja , New films released for Deepavali .. !! Decided to release movies only 2 weeks after VPF fee was canceled; Bharathiraja
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...