×

தந்தை மகன் கொலை வழக்கு; ஸ்ரீதரின் ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி: அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு

மதுரை: சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 3-வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த டிஜிபிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிறையில் இருக்கும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் 3-வது முறையாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கானது இன்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் ஜூலை 2-ம் தேதி முதல் மனுதாரர் சிறையில் இருக்கிறார். ஏறக்குறைய 130 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். மேலும் காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால் அவர் உடல்நலத்தை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர். சிபிஐ தரப்பில்; காவலில் வைத்து கொடூரமாக தாக்கியதில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்துள்ளனர். குற்றப்பத்திரிக்கை செப்.25-ல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது. ஜாமீன் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க அதிக வாய்ப்பு உள்ளது.

முக்கிய சாட்சிகள் அதே துறையில் பணியாற்றுபவர்கள். ஆகவே அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தேசிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் மனுதாரர் சிபிஐ விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என தெரிகிறது. ஆகவே ஜாமீன் வழங்க இயலாது. என்று தெரிவித்த நீதிபதி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இதனையடுத்து நீதிபதி; காவல் மரணங்கள் மனித தன்மையற்றது மட்டுமல்லாமல், ஜனநாயகத்திற்கு எதிரானது.

காவல் மரணங்கள் முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டியவை. பொது மக்களுக்கு சேவை வழங்கும் அரசு துறையினரால் பொதுமக்கள் முறையாக மரியாதையுடன் நடத்தப்படுவதில்லை என தெரிய வருகிறது. பொதுமக்கள் காவல் நிலையம் செல்வதற்கே அஞ்சுகின்றனர். காவல் நிலையம் செல்லும் பொதுமக்களை காவல்துறையினர் முறையாக மரியாதையுடன் நடத்துவதில்லை. இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிக அளவு காவல்நிலைய மரணங்கள் ஏற்படுகிறது. ஆகவே தமிழக காவல்துறை தலைவர் இந்த வழக்கின் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுகிறார். மேலும் காவல்  நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் முறையாக நடத்தப்பட வேண்டும்.

அவர்களின் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் மோசமாக நடத்துவது மற்றும் காரணமின்றி காக்க வைப்பது போன்றவற்றை காவல்துறையினர் தவிர்க்க வேண்டும். இது தொடர்பான சுற்றறிக்கையை தமிழக காவல்துறை தலைவர் அனைத்து காவல் நிலையங்களுக்கும், அனுப்ப வேண்டும். மேலும் புகார் அளிக்க வருபவர்களின் உரிமைகள் குறித்த செய்திகள் அனைத்தும் காவல் நிலையத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பலகைகள் அமைக்க வேண்டும்.

காவல் நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு அவை முறையாக இயங்குகிறதா என்பதை காவல்துறையினர் உறுதிப்படுத்த வேண்டும். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறை தலைவர் உத்தரவிட வேண்டும் என கூறி இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்துள்ளார்.


Tags : Sreedharan ,ICC ,police stations ,branch orders action , Father-son murder case; Sreedhar's bail plea dismissed 3rd: ICC branch orders action to install CCTV cameras in all police stations
× RELATED மாநகராட்சி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை