×

பா.ஜ.க-வின் வேல் யாத்திரை கோயில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை: ஐகோர்ட்டில் டிஜிபி தரப்பு வாதம்..!!

சென்னை: பா.ஜ.க-வினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையே என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் டிஜிபி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருக்கிறது. 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறியதை பாஜக-வினர் பின்பற்றவில்லை என்றும்; நீதிமன்றத்தில் சொல்வதும் நிஜத்தில் கடைபிடித்ததும் வெவ்வேறாக உள்ளது எனவும் டிஜிபி தரப்பில் வாதிடப்பட்டது. பாஜக மாநில தலைவர் முருகன் உட்பட கட்சியினர் யாரும் முறையாக முகக்கவசம் அணியவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் பின்னணி:

100 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூடக்கூடாது என்ற தமிழக டிஜிபி-யின் உத்தரவை எதிர்த்து தமிழக பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து, பாஜக திட்டமிட்டு நடத்திக் கொண்டிருக்கின்ற வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எத்தனை நபர்கள் கலந்துகொள்ள போகிறார்கள்? எத்தனை வாகனங்கள் செல்லப்படும் என்ற அறிக்கையை தாக்கல் செய்து அது தொடர்பாக டிஜிபி-யிடம் மனு அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை இன்று ஒத்திவைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையில் என்ன விவகாரங்கள் அடங்கியுள்ளது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் விஜயநாராயணன் தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். அச்சமயம், கடந்த 6,7 ஆகிய தேதிகளில் தமிழக பாஜக தரப்பில் தடையை மீறி வேல் யாத்திரை சென்றனர். இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பாஜக தலைவர் முருகன், பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேல் யாத்திரையில், பாஜக மாநில தலைவர் முருகன் உட்பட கட்சியினர் யாரும் முறையாக முகக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவில்லை. பாஜக-வினர் வேலுடன் சென்றது கோயில் யாத்திரை அல்ல; முழுக்க முழுக்க அரசியல் யாத்திரையை போன்று நடத்தப்பட்டது. 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என கோர்ட்டில் பாஜக சொன்னது காகித அளவிலேயே உள்ளது. மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் எல்.முருகனின் வாகனம் சென்றதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர் என குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நேற்று காங்கிரசார் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 3 ஆயிரம் நபர்கள் கலந்துகொண்டதாக தெரிவித்தார். அச்சமயம் தவறான செயலை நியாயப்படுத்த வேண்டாம் என பாஜக தரப்புக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பாஜகவின் வேல் யாத்திரையால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை ஊடகங்கள் மூலம் பார்த்தோம் என பாஜக தரப்புக்கு கண்டனம் தெரிவித்து வழக்கினை மதியம் ஒத்திவைத்துள்ளனர்.


Tags : Vail ,BJP ,pilgrimage ,temple pilgrimage ,DGP , BJP, Vail Pilgrimage, Temple Pilgrimage, Political Pilgrimage, ICC, DGP
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...