மணமேல்குடி அருகே விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் கட்டப்படும் பாலம்

அறந்தாங்கி: மணமேல்குடி அருகே விவசாய நிலங்களை பாதிக்கும் வகையில் போடப்படும் பாலத்தை கைவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மணமேல்குடி அடுத்த தினையாகுடி முதல் நிலையூர் வரை நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது பல்வேறு இடங்களில் சாலையின் ஓரங்களில் தடுப்புச் சுவர்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் தேவையான இடங்களில் பாலங்களும் கட்டப்பட்டு வருகின்றன.

இதேபோல கோபாலபுரம் அருகே சாலையின் இருபுறமும் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல அப்பகுதியில் ராட்சத குழாயை கொண்டு புதிதாக பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ராட்சத குழாயை கொண்டு பாலம் அமைக்கப்பட்டால், அந்த பாலத்தின் வழியே வரும் தண்ணீர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடும். இதனால் பல ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, ஏழை எளிய விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயி மதியழகன் கூறியது: தற்போது சாலை அமைக்கும் பணியின்போது கோபாலபுரம் அருகே புதிதாக ராட்சத குழாயை கொண்டு, பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த இடத்தில் இந்த பாலத்தை அமைப்பது தேவையற்றது. தேவையற்ற இந்த பாலத்தை சுமார் 10 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகி உள்ளது. விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும், இந்த பாலம் கட்டும் பணியை நெடுஞ்சாலைத் துறையினர் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே மாவட்ட நிர்ர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையினரும் உடனே தலையிட்டு, விவசாய நிலத்தை பாதிக்கும் தேவையற்ற பாலம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றார்.

Related Stories:

>