×

தென்பெண்ணையில் ஆலை கழிவுகள் கலப்பு: கெலவரப்பள்ளி அணையில் பெருக்கெடுக்கும் ரசாயன நுரை

ஓசூர்: தென்பெண்ணை ஆற்றில், கர்நாடக மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதால், கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரில் ரசாயன நுரை பெருக்கெடுத்து வருகிறது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் விநாடிக்கு 560 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், நீர்மட்டம் 40.02 அடியானது. அணையின் பாதுகாப்பு கருதி, 560 கனஅடி தண்ணீரும் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கிருஷ்ணகிரி அணை நோக்கி பாய்ந்து செல்கிறது.

தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதை பயன்படுத்தி, கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலை ரசாயன கழிவுகள் திறந்து விடப்படுகிறது. இதனால், ஓசூர் கெலவரப்பள்ளி அணைப்பகுதியில் தண்ணீர் முழுவதும், ரசாயன நுரை பெருக்கெடுத்து வருகிறது. அந்த தண்ணீர் அப்படியே கிருஷ்ணகிரி அணைக்கு வெளியேற்றப்படுவதால், வழிநெடுகிலும் உள்ள ஆற்றுப்படுகை நஞ்சாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மத்திய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக - கர்நாடகா மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தென்பெண்ணை ஆற்றில் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். அதனை பொருட்படுத்தாமல், கண்மூடித்தனமாக தொடர்ந்து கழிவுகள் வெளியேற்றப்பட்டு வருவது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது,’ என்றனர்.

Tags : Kelavarapalli dam , Thenpennai
× RELATED ஒசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்...