×

வட்டியில்லா சுலப தவணை திட்டம் உட்பட கவர்ச்சி திட்டங்கள் மூலம் வேலூரில் கோடிக்கணக்கில் போலி வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை

வேலூர்: வட்டியில்லா சுலப தவணை திட்டம் உட்பட பல்வேறு கவர்ச்சி திட்டங்கள் மூலம் வேலூரில் போலி வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை வெகுஜோராக நடந்து வரும் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு: வேலூர் மாவட்டத்தில் வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வட்டியில்லாத சுலப தவணை மூலம் பொருட்களை தருவதாக கூறி கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மிகப்பெரிய அளவில் விளம்பரங்கள் செய்து வாடிக்கையாளர்களை கவருகின்றனர்.

ஆனால், இவர்கள் விற்பனை செய்யும் பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் பொருட்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உண்மையிலேயே அந்நிறுவனங்களில் தயாரிக்கப்பட்டதுதானா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. இதற்கு சில நிறுவனங்களை சேர்ந்தவர்களே உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுதெரியாமல் வாடிக்கையாளர்கள், தங்களுக்கு எவ்வித ஆவணங்களும் இன்றி சுலப தவணையில் பொருட்களை வழங்குவதாலும், ஷோரூம்களுக்கு செல்லும்போது கனிவுடன் கவனிப்பதாலும், பிரபல நிறுவனத்தின் பெயரின் நம்பகத்தன்மையாலும் அவர்களிடம் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

வாங்கி செல்லும் பொருட்கள் 2 ஆண்டுகளில் தங்கள் ஆயுளை முடித்துக் கொண்டாலும் கவலைப்படுவதில்லை. அப்பொருளை திரும்ப அளித்து அதற்கான தள்ளுபடியுடன் புதிய மாடலில் அதே உபயோக பொருட்களையோ வேறு பொருட்களையோ பெற்றுச்செல்கின்றனர். இதனால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து அவர்கள் அறிவதில்லை.

வாடிக்கையாளர்களின் இந்த பலவீனத்தையே தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் இத்தகைய நிறுவனங்கள், போலியான தயாரிப்புகளை பெரிய அளவில் மலேசியா, சீனா போன்ற நாடுகளில் இருந்தும் மும்பை போன்ற நகரங்களில் இருந்தும் அடிமாட்டு விலைக்கு வாங்கி வருகின்றனர். அவற்றை எவ்வித ஆவணங்களும் இன்றி கன்டெய்னர் லாரிகளில் மாநில எல்லைகளை தாண்டியும், மாவட்ட எல்லைகளை தாண்டியும் வேலூர் மாவட்டத்துக்குள் கொண்டு வருகின்றனர்.
இங்கு முக்கிய இடங்களில் தாங்கள் வைத்துள்ள ரகசிய கிடங்குகளில் இருப்பு வைத்து அங்கு அந்த போலி தயாரிப்புகளுக்கு பிரபல தயாரிப்பு நிறுவன பிராண்டுகளாக மாற்றி விற்பனை செய்து வருகின்றனர். போலி தயாரிப்புகளை கொண்டு வரும் கன்டெய்னர் லாரிகளை யாரும் தடுப்பதும் இல்லை. சோதனையிடுவதும் இல்லை. காரணம் உயர் அதிகாரிகளின் அதீத ஆதரவு தான்.

பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் அனைத்து பொருட்களும் தரமானதாக விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை எந்த அதிகாரிகளும் ஆய்வு செய்வதில்லை. அவர்களது கண்ணசைவிலேயே போலி பொருட்கள் விற்பனை செய்யப்படுவதால் அதன்மூலம் கோடியாக கொட்டும் பணத்தைக்கொண்டு உதவி செய்யும் அதிகாரிகளையும் குளிர்வித்து வருகின்றனர். அதேபோல் தவணை திட்டத்தின் மூலம் பொருட்களை வாங்கியவர்கள் தவிர்க்க முடியாமல் ஒருசில தவணை செலுத்த முடியவில்லை என்றால் அடியாட்கள் மூலம் அவர்களை மிரட்டுவது, சித்ரவதை செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசில் புகார் அளித்தாலும் அவர்களும் கண்டு கொள்வதில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அதேபோல் மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ, ஷோபா செட், ஷோகேஸ் என தரமற்ற மரக்கட்டைகளுக்கு வர்ணம் பூசி, உள்ளூரிலேயே பணியாளர்களை வைத்து மேக்கப் போட்டு வெளிநாட்டு இறக்குமதி என்று கூறி பர்னிச்சர் வியாபாரத்திலும் பலமடங்கு லாபம் பார்த்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்த பொருட்கள் சர்வதேச தரத்திலானது என்று வெளிநாட்டு மோகத்தை ஏற்படுத்தி நூதன முறையில் வியாபாரம் செய்கின்றனர். அவற்றை வாங்கிச் சென்றால் சில மாதங்களிலேயே பல்லிளித்து விடுகிறது. கைதவறி சிறிது தண்ணீர் பட்டால் கூட மேக்கப் கலைவது போல பர்னிச்சர்கள் சிதைந்து விடுகிறது.

இப்படி ஏழைமக்களை ஏமாற்றி பிரமாண்டமான முறையில் வளர்ந்துள்ள அந்த நிறுவனங்கள் இப்போது தமிழகம் முழுவதும் மக்களை குறிவைத்து கடைவிரித்து வருகிறது. அவர்களின் தில்லாலங்கடி முயற்சியில் மக்கள் உஷாராக இருந்தால் மட்டுமே இதுபோன்ற போலி நிறுவனங்களை தடுக்க முடியும் என்பதே ஏமாந்த மக்களின் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஏழை மக்கள் ஆசையில் மண் அள்ளிப்போடும் அவலம்

தற்போதுள்ள காலகட்டத்தில் தினக்கூலி செய்யும் தொழிலாளியாக இருந்தாலும், தன்குடும்பத்தினர் விருப்பத்திற்காக மாதத்தவணை திட்டத்திலாவது டிவி, பிரிட்ஜ் போன்றவற்றை வாங்கிவிடுகின்றனர். ஆனால் ஒரிஜினல் பிராண்டை போலவே போலியாக தயாரிக்கப்பட்ட பொருட்களை ஏழை மக்களுக்கு விற்பனை செய்துவிடுகின்றனர். அது சில மாதங்களிலேயே பழுதாகிவிடுகிறது. இப்படி சில குறிப்பிட்ட டீலர்கள் தாங்கள் கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்து, ஏழை மக்கள் ஆசையில் மண் அள்ளிப்போட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற போலி டீலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் குரல் எழுப்புகின்றனர்.
மாவட்டங்கள் ேதாறும் கிளைகள் எப்படி?

சாதாரணமாக ஒரு எலக்ட்ரானிக் ஷோரூம் நடத்தினாலே, அந்த பொருட்கள் விற்பனை செய்து லாபம் சம்பாதிப்பதற்குள் அதன் உரிமையாளர்கள் படாத பாடுபடுவார்கள். ஆனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட பிரபல ஷோரூம்களின் கிளைகள் மட்டும் ஆண்டுக்கு ஒன்று, இரண்டு என்று மாநிலம் முழுவதும் ேஷாரூம் கிளைகள் வளர்ந்துகொண்டே போகிறது. இதற்கு காரணம் அதிகாரிகள் துணையுடன் போலி எலக்ட்ரானிக் பொருட்கள் அமோக விற்பனை தான் என்று, நேர்மையாக தரமான பொருட்களை விற்பனை செய்யும் எலக்ட்ரானிக் ஷோரூம் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆன்லைனில் வாங்குவது நல்லது

போலியான வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே பல ஷோரூம்களை அமைந்துள்ள பிரபல நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர கவர்ச்சி திட்டங்களை அறிவிக்கின்றன. பண்டிகை காலங்களில் நம்ப முடியாத அளவில் சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கூட்டுகின்றனர். கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதும் இல்லை. இதனால் கூட்டத்தில் சேர்ந்து நோய் பரவலில் சிக்குவது ஒருபுறமிருக்க போலியான பொருட்களை வாங்கி ஏமாந்துபோவதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது. போலியான பொருட்களை அவ்வளவு எளிதில் நம்மால் கண்டறிய முடிவதில்லை. எனவே கொரோனா பாதிப்புகளை தவிர்க்கும் வகையிலும் தரமான பொருட்களை வாங்கும் வகையிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலம் வாங்குவதே சிறந்தது என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

Tags : Vellore , Fake home appliances
× RELATED குடிபோதையில் ரகளை செய்ததால்...