×

மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் தர மறுக்கும் ஆளுநர்!: சட்டரீதியாக எதிர்கொள்ளப்போவதாக நாராயணசாமி அறிவிப்பு..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு தர முடியாது என ஆளுநர் மறுத்த விவகாரம் சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநரின் செயல், ஏழை மாணவர்களை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், நீட் தேர்வு என்பது அகில இந்திய பாடத்திட்டத்தின் மூலமாக கேள்விகள் தயாரிக்கப்படுகின்றன. அதனால் அதிகப்படியான அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வில் தேர்ச்சி பெற இயலாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க முடிவு செய்து அது சம்பந்தமான கோப்பையை அனுப்பினோம்.

ஆனால் துணை நிலை ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவை ஏற்றுக்கொள்ளாமல் கருத்து வேறுபாடு உள்ளது என்று தெரிவித்து அதனை மத்திய உள்துறைக்கு அனுப்பியுள்ளனர். இதனை தாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம் என குறிப்பிட்டார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர், உள்துறை செயலரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அப்போது, இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசாணை வெளியிடுதல், உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்குள்ள அதிகாரம் குறித்தும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டது குறித்தும் தெரிவிப்போம். நிகழாண்டு மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு வழங்குவதே புதுவை அரசின் கொள்கை எனவும் முதல்வர் நாராயணசாமி குறிப்பிட்டார்.


Tags : Governor ,Narayanasamy ,government school students , Medical Studies, Government School Student, Reservation, Law, Narayanasamy
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளர், கட்சி...