×

அடுத்த சீசனில் இதை விட சிறப்பாக விளையாடுவோம்... டேவிட் வார்னர் உறுதி

அபுதாபி: அடுத்த ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இதை விடவும் சிறப்பாக விளையாடும் என்று அந்த அணியின் கேப்டன் வார்னர் கூறியுள்ளார். அபுதாபியில் நடந்த 2வது குவாலிபயர் ஆட்டத்தில் டாஸ் வென்று பேட் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 3விக்கெட் இழப்புக்கு 189 ரன் எடுத்தது. அந்த அணியின் தவான் 78, ஸ்டாய்னிஸ் 38, ஹெட்மயர் 42* ரன் எடுத்தனர். ஐதராபாத்தின் சந்தீப், ஹோல்டர், ரஷித்கான் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் எடுத்து 17 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியின் கேன் வில்லியம்சன் 67, அப்துல் சமது 33 ரன் எடுத்தனர். டெல்லி பந்துவீச்சில் ரபாடா 4, ஸ்டாய்னிஸ் 3, அக்சர் படேல் ஒரு விக்கெட் எடுத்தனர்.

ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர், ‘ஆரம்பம் முதலே எங்கள் அணி குறித்து யாரும் பேசவில்லை. எல்லோரின் எதிர்பார்ப்பும் முக்கிய அணிகளான மும்பை, டெல்லி, பெங்களூர் மீதே இருந்தன. அதனால் இந்த இடத்தை எட்டியதற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். புவனேஷ்வர் குமார், விருத்திமான் சாஹா உட்பட பல வீரர்கள் காயம் காரணமாக விளையாடாமல் போனது இழப்புதான். ஆனால் விளையாடிய அத்தனை வீரர்களும் திறமையானவர்கள். சிறப்பாக செயல்பட்டனர். நடராஜன், ரஷித், மணிஷ் பாண்டே நன்றாக விளையாடினர். எல்லா ஆல் ரவுண்டர்களையும் பாராட்டுகிறேன்.  

இந்த  தொடர் மூலம் நடராஜன் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். இன்றைய போட்டியை பொறுத்தவரை, கேட்ச் வாய்ப்புகளை வீணடித்தால் வெல்ல முடியாது என்பது நிரூபணமாகி உள்ளது. மறுபடியும் சொல்கிறேன், இந்த இடத்தை எட்டியதற்காக பெருமைப்படுகிறேன். எப்போதும் ஆதரவாக இருக்கும் ரசிகர்களுக்கு நன்றி. ஐதராபாத் எனது இரண்டாவது ஊர். அணியின் உரிமையாளர்கள் எனது குடும்பம் போன்றவர்கள். அடுத்த ஆண்டு ஐபிஎல் இந்தியாவில் நடக்கும் என்று நம்புகிறேன். அப்போது இன்னும் சிறப்பாக விளையாடுவோம்’ என்றார்.

டெல்லி அணி முதல் முறையாக ஐபிஎல் பைனலுக்கு முன்னேறி அசத்தியது. ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாய்னிஸ், ‘ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் டி20 தொடரில் தொடக்க வீரராக விளையாடி உள்ளேன். இந்த ஆட்டத்தில் தொடக்க வீரராகக் களம் கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. பிறகு எல்லாம் நன்றாக அமைந்தது. தனிமைப்படுத்தலில் இருந்தது, குடும்பத்தை விட்டு விலகி இருப்பது போன்றவை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே கடினமாகதான் இருக்கிறது. பைனலுக்கான வியூகம் குறித்து பயிற்சியாளர் பான்டிங்கிடம் பேசுவோம். மும்பை நல்ல அணி. எங்களின் தரமான ஆட்டம் இறுதிப் போட்டியை வெல்ல போதுமானதாக இருக்கும்’ என்றார்.

டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில், ‘ஆச்சர்யமாக இருக்கிறது. இது ஒரு அற்புதமான உணர்வு. இந்த தொடர் முழுவதும் ஏற்ற இறக்கங்கள் தொடர் கதையாக இருந்தன. நாங்கள் அனைவரும் ஒரு குடும்பமாக இருந்து அதை எதிர்கொண்டோம். கேப்டனாக நிறைய பொறுப்புகள் இருக்கிறது. அதே நேரத்தில் அணியின் பயிற்சியாளர், உரிமையாளர் ஆகியோரிடம் இருந்து கிடைக்கும் ஆதரவு மூலம் அவற்றை சமாளிக்க முடிகிறது. இந்தப் போட்டியில்  ஸ்டாய்னிஸ் அதிக பந்துகளை சந்திப்பது ஸ்கோரை அதிகரிக்க உதவும் என்று எண்ணினோம். அதனால் அவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கினோம். ரஷித் கான் பந்துவீச்சை எச்சரிக்கையாக எதிர்கொள்வது அல்லது தவிர்ப்பது என்று முடிவு செய்திருந்தோம். வலது கை பேட்ஸ்மேன்கள் களத்தில் இருந்ததால் அஷ்வினை போதுமான அளவுக்கு பயன்படுத்தவில்லை. காகிசோ ரபாடா சொன்னது போல் இன்று அவருடைய நாளாக இருந்தது. தனது கடைசி ஓவரில் அவர் 3 விக்கெட்களை எடுத்ததும் வெற்றிக்கு உதவியாக இருந்தது’ என்று தெரிவித்தார்.

Tags : season ,David Warner , Let's play better than this next season ... David Warner sure
× RELATED கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் 2-ன் புதிய பாடல் “தமிழ் வாழ்த்து” வெளியீடு