அரசு நிலத்தில் சாலை அமைக்க தடை விதித்ததால் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்

திருப்போரூர்: அரசு நிலத்தில், சாலை அமைக்க தடை விதித்தற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். இதனால், மானாம்பதி கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்போரூர் ஒன்றியம் மானாம்பதி கிராமத்தில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை ஒட்டி சுமார் 500 ஏக்கர் விவசாய நிலம் அமைந்துள்ளது. இந்த நிலப்பரப்பின் நடுவில் உள்ள நிலங்களுக்கு டிராக்டர்கள், மாட்டு வண்டிகளில் உரம், விதை, பூச்சி மருந்து, வேளாண் விளை பொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை இருந்தது.

இதனால், நில உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்து, திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து, அரசு களம் புறம்போக்கு நிலத்தில் சாலை அமைக்க முயற்சித்தனர். இதற்காக, கருங்கற்கள் ஆகியவற்றை எடுத்து வந்து தற்காலிக சாலை அமைத்தனர். இந்த சாலை அமைக்கும் நிலத்தை ஒட்டியுள்ள அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள சிலர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திருப்போரூர் வட்டாட்சியர் மற்றும் ஒன்றிய ஆணையாளரிடம் ஆட்சேபணை மனு அளித்தனர். மேலும், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நிலத்தின் வழியாக செல்ல தடை உத்தரவு பெற்றனர். இதுகுறித்த அறிவிப்பு பலகையை வைத்து வேலி அமைத்தனர்.

இதையறிந்த பல்வேறு விவசாய நிலங்களின் உரிமையாளர்கள், நேற்று மானாம்பதி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு, அரசு நிலத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதோடு, அதற்கு நீதிமன்ற தடையாணை வாங்கி வேலி அமைத்ததையும், இந்த நீதிமன்ற தடையாணையை ரத்து செய்ய வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாய நிலங்களுக்கும் உரம், பூச்சி மருந்து, விளை பொருட்களை வாகனங்கள் மூலம் கொண்டு செல்ல ஒன்றிய நிர்வாகம் தரப்பில் சாலை அமைத்துத் தர வேண்டும் என கோஷமிட்டனர்.

இதைதொடர்ந்து திருப்போரூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் அங்கு வந்து, பொதுமக்களிடம் சமரசம் பேசினார். அப்போது, அரசு நிலத்தை மீட்க உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு நிலத்தை மீட்டதும், விவசாயிகள் தங்களது வேளாண் விளை பொருட்களை கொண்டு செல்ல, ஒன்றிய நிர்வாகம் சார்பில் சாலை அமைத்து தரப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தின்போது மானாம்பதி வருவாய் ஆய்வாளர் ஷகிலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories:

>