தடையை மீறி வேல் யாத்திரை தொடங்க பாஜவினர் முயற்சி: எச்.ராஜா உள்பட 200க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் தடையை மீறி வேல் யாத்திரை தொடங்க முயற்சித்த பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா உள்பட 200க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் பாஜவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனாலும், தடையை மீறி வேல் யாத்திரை நடத்துவதற்காக பாஜ மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா உள்ளிட்டோர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பாஜ முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா தலைமையில், மயிலுடன் முருகர் வேடத்தில் வந்த பாஜவினர், காஞ்சிபுரம் சங்கர மடம் பகுதியில் இருந்து வேல் யாத்திரையை தொடங்க முயற்சித்தனர். இதில் கலந்துகொண்ட பாஜ தொண்டர்கள், சமூக இடைவெளியை மீறி நெருக்கமாக இருந்தனர். இதனால், போலீசார் சார்பில் பாதைகள் அடைக்கப்பட்டு, பேரி கார்டுகள் வைத்து  பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், யாத்திரையை தொடங்க முயன்ற எச்.ராஜா, பாஜ நெசவாளர் அணி கணேஷ், ஓம்சக்தி பெருமாள், கூரம் விஸ்வநாதன்  உள்பட 186 ஆண்கள், 24 பெண்கள் என 210 பேரை கைது செய்து, அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

* முன்னதாக எச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எதிர்க்கட்சிகளின் மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணிந்து விட்டது. அதனால் வேல் யாத்திரைக்கு தடை விதித்துள்ளது. தமிழக முதலமைச்சர் மேட்டுப்பாளையத்தில் கலந்து கொண்ட கூட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர். அப்போது பரவாத கொரோனா தொற்று வேல் யாத்திரை நடத்தினால் பரவி விடுமா. வரும் 16ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தொற்று முற்றிலும் குறைந்து விட்டது. இதனால், பள்ளிகள் திறக்கப்படும் என கூறியுள்ளது. பல அரசு நிகழ்ச்சிகளுக்கு தடையில்லை. ஆனால், பாஜவின் வேல் யாத்திரைக்கு தடை விதிப்பதற்கு உள்நோக்கம் இருக்கிறது. எனவே, தமிழக அரசு மறு பரிசீலனை செய்து அனுமதி வழங்க வேண்டும். இல்லாவிட்டாலும், டிசம்பர் 6ம் தேதி வரை வேல் யாத்திரை தொடர்ந்து நடக்கும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்காததால் அதிமுக கூட்டணி தொடருமா என செய்தியாளர் கேட்டதற்கு, கூட்டணி வேறு, போராட்டம் வேறு என்றார்.

Related Stories:

>