கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிய பெண் குழந்தை கடத்தல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் பெற்றோருடன் தூங்கிய 3 மாத பெண் குழந்தையை மர்ம நபர்கள் கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (29). கோயம்பேடு மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் வேலை செய்து வருகிறார். இவர், மனைவி சந்தியா (26) மற்றும் சஞ்சனா என்ற 3 மாத பெண் குழந்தையுடன் கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் தங்கியிருந்தார். தினசரி வேலை முடிந்ததும், இரவில் அங்குள்ள 3 சக்கர வாகனத்தில் 3 பேரும் படுத்து தூங்குவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் ரமேஷ், தனது மனைவி, குழந்தையுடன் தூங்கியுள்ளார்.

நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து பார்த்தபோது, அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சஞ்சனா காணாமல் போனதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனே, மார்க்கெட் வளாகம் முழுவதும் குழந்தையை தேடினர். ஆனால், எங்கு தேடியும் குழந்தையை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ரமேஷ் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் தலைமையிலான போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு, குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

>