×

அமெரிக்காவில் 3வது கட்ட பரிசோதனை: கொரோனா மருந்து 90% பலன் தருகிறது

வாஷிங்டன்: அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 3வது கட்ட பரிசோதனையில் 90 சதவீதம் பலன் தருவதாக மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பரிசோதனைகள் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. இந்த பரிசோதனையில் பல நிறுவனங்கள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட் மருந்து பெரும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவை சேர்ந்த பைசர் மருந்து நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் தருவதாக பரிசோதனையில் உறுதியாகி உள்ளது.

பைசர் நிறுவனம் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனத்துடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடித்து வருகிறது. இதன் 3வது கட்ட பரிசோதனை நடந்து வருகின்றது. இது கொரோனா நோயாளிகளிடம் நல்ல முன்னேற்றத்தை தருவதாக பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல் கட்ட மருந்து கொடுத்த 28 நாட்களிலும், இரண்டாவது முறை மருந்து கொடுத்த ஒரு வாரத்திலும் கொரோனா நோயாளிகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி கிடைப்பதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  நடப்பு ஆண்டில் 5 கோடி டோஸ் மருந்து மற்றும் 2021ம் ஆண்டில் 130 கோடி டோஸ் வரையிலும் மருந்து தயாரித்து உலகம் முழுவதும் விநியோகிக்க முடியும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இந்தியாவுக்கு கிடைக்குமா?: பைசர் மருந்தை பொறுத்த வரை இந்தியாவில் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள், இந்திய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற்று, உள்நாட்டு நிறுவனத்துடன் இணைந்து மனிதர்களிடம் செலுத்தி பரிசோதனை செய்ய வேண்டும். அதன்பிறகு தான் இந்தியாவில் தயாரித்து விநியோகிக்க முடியும். ஆனால் பைசர் நிறுவனம் இதற்கான முயற்சிகள் எதையும் எடுக்கவில்லை. அதே போல, மத்திய அரசும் சைபர் மருந்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை இப்போதைக்கு தொடங்கவில்லை என அதிகாரிகள் கூறி உள்ளனர்.

இந்தியாவில் ஏற்கெனவே 5 கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் உள்ளது. சீரம் இன்ஸ்டிடியூட், பாரத் பயோடெக், சைடஸ் கெடிலா, பயோலாஜிக்கல் இ மற்றும் டாக்டர் ரெட்டி ஆய்வுமையம் உள்ளிட்ட 5 மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்து வருகின்றன.

தடாலடியாக சரிந்தது தங்கம்
அமெரிக்க தடுப்பூசி 90% பலன் தருவதாக மருந்து நிறுவனம் உறுதிப்படுத்தியதை அடுத்து, தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு டிராய் அவுன்ஸ் (31.1 கிராம்) வரலாறு காணாத அளவில் ஒரே நாளில் திடீரென 84 டாலர் வரை சரிந்தது. முந்தைய நாள் வர்த்தக முடிவில் ஒரு டிராய் அவுன்ஸ் 1,959 டாலராக இருந்தது. நேற்று வர்த்தக துவக்கத்தில் 1,956 டாலராகவும், அதிகபட்சமாக 1,966 டாலராகவும் இருந்தது. பின்னர் 1,867 டாலர் வரை சரிந்தது.  வர்த்தக ஏற்ற இறக்கம் ஏற்பட்டாலும் முந்தைய நாளை விட 70 முதல் 80 டாலர்கள் சரிந்தே காணப்பட்டது. இதுபோல், கொரோனா தடுப்பூசி வெற்றியால், பிரன்ட் கச்சா எண்ணெய் பேரல் 10 சதவீதம் உயர்ந்து 43.48 டாலரானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச ஒரு நாள் உயர்வாக கருதப்படுகிறது.


Tags : Phase ,testing ,United States ,Corona , Phase 3 testing in the United States: Corona drug is 90% effective
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...