×

அண்ணா பல்கலைக்கு ஒப்பந்த அடிப்படையிலான உதவி பேராசிரியர்கள் அறிவிப்பு ரத்து: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை: சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தின் மண்டல அளவிலான பல்கலை கழகங்கள் 2008-09ம் ஆண்டில் திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலியில் தொடங்கப்பட்டன.   இந்த பல்கலைக்கழகங்களில் தற்காலிக மற்றும் நிரந்தர அடிப்படையில் 899 உதவி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். பின்னர் 2011ல் மண்டல பல்கலைக்கழகங்களை மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது. இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் பணியாற்றியவர்களுக்கு பணிநீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், சிலர் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில், 2019ம் ஆண்டு தற்காலிக அடிப்படையில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.  

இதையடுத்து, ஒப்பந்த அடிப்படையில் புதியவர்களை நியமிக்கவும் தடைவிதிக்க கோரியும், ஏற்கனவே பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்யக்கோரியும் உதவி பேராசிரியர் கண்ணன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி,  ஒப்பந்த அடிப்படையில் 310 பேரும், நிரந்தர அடிப்படையில் 13 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 3 மண்டல வளாகங்களில் 556 பேரும் பணியாற்றி வருகிறார்கள்.  அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் விதிகளின்படி, 20 மாணவர்களுக்கு ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில்,  25 ஆயிரத்து 680 இளங்கலை மாணவர்களுக்கு ஆயிரத்து 284 பேராசிரியர்களும்,  ஆயிரத்து 806 முதுகலை மாணவர்களுக்கு 120 பேராசிரியர்களும் என 1404 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.

 தற்காலிக ஆசிரியர்களை நீக்கிவிட்டு மீண்டும் தற்காலிக அடிப்படையில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க அவசியம் இல்லை. எனவே, இதுதொடர்பாக 2019ல் வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்கள் உள்ளிட்ட 310க்கும் மேற்பட்டோர் தற்காலிக அடிப்படையில் உள்ளதால்,  பணிநிரந்தரம் செய்ய உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்திற்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்தும். போதிய தகுதியும் அனுபவமும் உள்ள மனுதாரர் போன்றவர்களை, நிரந்தரப் பணியில் காலியிடம் ஏற்படும்போது நியமிக்கலாம்.  மனுதாரர் உள்ளிட்டோரை டிசம்பர் 1ம் தேதி முதல் தற்காலிக பணியாளர்களாக பணியில் தொடர அனுமதிக்க வேண்டும். அவர்களுக்கு நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கான ஊதியத்தை  வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : Cancellation ,assistant professors ,Anna University , Cancellation of contract-based assistant professors notice to Anna University: Chennai iCourt Action Order
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!