×

ஆட்சி அமைக்கப்போவது யார்? பீகாரில் இன்று வாக்கு எண்ணிக்கை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

பாட்னா: நடந்து முடிந்த பீகார் சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு கடந்த 15 ஆண்டுகளாக நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் 29ம் தேதி முடிவடைய உள்ளதையொட்டி, மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு, மற்ற வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனையொட்டி, வாக்கு எண்ணும் மையங்கள், மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி தெரிய வரும்.தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில், 31 வயதே நிரம்பிய தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணிக்கு அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதில், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்தேர்தலில் வெற்றி கிடைத்தால், அது கம்யூனிஸ்ட் கட்சிகளின் எதிர்காலத்தை புதுப்பிக்கும் வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது. இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி எச்.ஆர். னிவாசா கூறுகையில், ``அரசு அறிவித்துள்ள கொரோனா விதிமுறைகளை பின்பற்றப்படும். முதலில், தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளன.

அதன் பிறகு, வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில், சீலிட்டு மூடப்பட்டுள்ள மின்னணு வாக்கு எந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதனையொட்டி, மொத்தம் 78 கம்பெனி மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 19 கம்பெனி படையினர் சர்ச்சைக்குரிய வாக்கு எண்ணும் மையங்களிலும், மீதமுள்ள 59 கம்பெனி மாநிலத்தின் சட்டம், ஒழுங்கை கண்காணிப்பதிலும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு மையங்களுக்கு வெளியே தொண்டர்கள், ஆதரவாளர்கள் கூடுவதை தவிர்க்க, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

இடைத்தேர்தல் முடிவுகள்
மத்திய பிரதேசத்தில் 19 மாவட்டங்களில் உள்ள 28 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இதில் 12 அமைச்சர்கள் உள்பட 355 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஏற்கனவே 107 எம்எல்ஏ.க்கள் உள்ள நிலையில், 8 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜ.வுக்கு தேவையான பெரும்பான்மை கிடைத்து விடும். ஆனால் காங்கிரசுக்கு பெரும்பான்மை கிடைக்க 28 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும். இருப்பினும், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மபி உட்பட 11 மாநிலங்களில் நடந்த 56 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளும் இன்று அறிவிக்கப்பட உள்ளன.

Tags : Bihar , Who is going to rule? Vote count in Bihar today: Heavy security arrangement
× RELATED பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!