வேல் யாத்திரையை தொடங்கி வைக்க வந்த பாஜ தலைவர் எல்.முருகன் கைது: செங்கல்பட்டில் பரபரப்பு

சென்னை: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் நேற்று வேல் யாத்திரையை தொடங்கி வைக்க பாஜ தலைவர் முருகன் வந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.  திருத்தணியில் இருந்து திருச்செந்தூர் வரையிலான பாஜவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. அதை மீறி கடந்த 6ம் தேதி திருத்தணியில் வேல் யாத்திரை தொடங்கிய தலைவர் எல்.முருகன் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். நேற்று முன் தினம் திருவொற்றியூரில் வேல் யாத்திரையை தொடங்கி வைக்க வந்த எல்.முருகன், கைதாகி விடுதலையானார். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் வேல் யாத்திரையில் எல்.முருகன் பங்கேற்க இருந்தார்.  இதனால் டிஐஜி சாமுண்டீஸ்வரி, செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், பகல் 11 மணியளவில் பரனூர் சுங்கசாவடிக்கு காரில் எல்.முருகன்  வந்தார்.  அங்கிருந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள விநாயகர் கோயிலில் தரிசனம் செய்தார். பின்பு, அங்கிருந்து காரில் ஊர்வலமாக பழைய பேருந்து நிலையத்திற்கு அவர் வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த விழா மேடையில், உரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக வெள்ளிவேல் அவருக்கு வழங்கப்பட்டது. பாஜ மாநிலத்தலைவர் எல். முருகன் பேசி முடித்தபின்னர் போலீசார் அவரை கைது செய்தனர். அவருடன் பாஜ மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, மாவட்டதலைவர் பலராமன் இளைஞரணி நிர்வாகிகள் தனசேகர், விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. 500 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர், மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர்.

Related Stories:

>