×

கஞ்சா விற்பனை குறித்து போலீசிடம் கூறியதால் ஆத்திரம் தனியார் டிவி நிருபர் சரமாரி வெட்டி கொலை: 4 பேர் கும்பல் கைது: பெரும்புதூர் அருகே பயங்கரம்

சென்னை:  பெரும்புதூர் அருகே கஞ்சா விற்பனையை தட்டி கேட்ட தனியார் டிவி நிருபரை 4 பேர் கும்பல் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொன்றது. இதுகுறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  பெரும்புதூர் அருகே சோமங்கலம் அடுத்த புதுநல்லூர் தெருவை சேர்ந்தவர் யேசுதாஸ். நிருபர். இவரது மகன் இஸ்ரேல்  மோசஸ் (25), டிவியில் நிருபராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று  முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது வீட்டில் இருந்தார். அப்போது ஒரு வாலிபர் வந்து மோசஸை அழைத்து கொண்டு வெளியே சென்றார். இருவரும் பேசி கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 2 பேர் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டைகளுடன் வந்தனர்.

இதை பார்த்த மோசஸ் அதிர்ச்சியடைந்து, தப்பியோட முயன்றார். எனினும் 3 பேரும் சேர்ந்து விரட்டிச் ெசன்று மோசசை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பினர். இதில்  தலை, கழுத்து மற்றும் கையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் மோசஸ் அலறியபடி கீழே சாய்ந்தார்.சத்தம் கேட்டு யேசுதாஸ் மற்றும் உறவினர்கள் ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் துடித்த மோசஸை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.   தகவலறிந்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரை பிடித்து விசாரித்தனர்.  இதில், நல்லூர் புதுநகர் பகுதியில் வசிக்கும் இளைஞர்களுக்கு அதிகளவு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சோமங்கலம் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தியிடம் மோசஸ் ெதாடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

இது கஞ்சா வியாபாரிகளுக்கு தெரியவந்ததால், அவர்களுடன் மோசஸ்சுக்கு பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கஞ்சா வியாபாரி நவமணி தூண்டுதலின்பேரில், கூலிப்படையினர் மோசசை அரிவாளால் வெட்டி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து பழைய நல்லூரை சேர்ந்த விக்னேஷ் (எ) எலி அப்பு (19), 17 வயது சிறுவன் வெங்கடேசன் (எ) அட்டை (19), கொலைக்கு தூண்டிய கஞ்சா வியாபாரி நவமணி (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

4 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது
குற்றவாளிகள் 4 பேரையும் சம்பவம் நடந்து 4 மணி நேரத்தில் ைகது செய்து விசாரணை நடத்தியதில் நவமணி  கூறியது:  இப்பகுதியில் கஞ்சா வாங்கி வந்து புகைப்போம். மேலும் நண்பர்களுக்கு விற்பனை செய்வோம். இந்நிலையில் தொடர்ந்து எங்களை பற்றி போலீசிடம் புகார் கொடுத்து வந்தார் மோசஸ். இதையடுத்து போலீசார் எங்களுக்கு தொல்லை கொடுத்தனர். மேலும் நண்பரை தகாத வார்த்தைகளால்  மோசஸ் பேசி வந்துள்ளார். புறம்போக்கு இடத்தையும் விற்பனை செய்து வந்தோம். இது குறித்தும் அதிகாரிகளிடம் கூறி அதை விற்க விடாமல் செய்தார். இதானால் ஆத்திரம் அடைந்த நாங்கள் அவரை கொலை செய்ய திட்டமிட்டோம்.

நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்கு போய் அவரை வெளியே அழைத்து வந்து அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுவிட்டோம்.  நல்லூர் காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்தோம். போலீசார் எங்களை கைது செய்தனர் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் கூறினர். பெரும்புதூர் காவல் உட்கோட்டத்தில் கஞ்சா விற்பனை தொடர்ந்து  நடைபெற்று வருவதும் அதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடைபெற்று வருவதும் தொடர்கதையாகி வருகிறது. அதனால் காவல்துறையினர் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சமூக விரோதக் கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் மோசஸ் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகக் கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். கஞ்சா வியாபாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அதிமுக அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதை கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும். பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட திமுக என்றென்றும் துணை நிற்கும்.



Tags : TV reporter ,death ,பயTerror ,gang ,Perumbudur , Private TV reporter hacked to death for telling police about cannabis sale: 4 gang arrested: Terror near Perumbudur
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...