வடசென்னை மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷை மாற்றக்கோரி அதிமுக தலைமை அலுவலகம் திடீர் முற்றுகை: பெரம்பூர், ஆர்.கே.நகரை சேர்ந்த 1000 பேர் திரண்டதால் பரபரப்பு

சென்னை: அதிமுக வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளராக இருப்பவர் ஆர்.எஸ்.ராஜேஷ். இவர் கடந்த சில ஆண்டுகளாக கட்சியில் தனக்கு வேண்டியவர்களுக்கும், டி.டி.வி.தினகரன் கட்சியில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர்களுக்கும் பதவி வழங்கி வருவதாக பெரம்பூர், ஆர்.கே.நகர் தொகுதி அதிமுகவினர் கட்சி தலைமைக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் கட்சி தொண்டர்களின் புகாரை தலைமை கழக நிர்வாகிகள் கண்டுகொள்ளவில்லை.இந்த நிலையில், பெரம்பூர் அதிமுக பகுதி செயலாளர் ஜே.கே.ரமேஷ் தலைமையில், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வெற்றிவேந்தன், ஆர்.கே.நகர் பகுதி பொருளாளர் எஸ்.எம்.முருகன், கார்த்திகேயன் (முன்னாள் மண்டல குழு தலைவர்), இளைஞர் அணி பகுதி செயலாளர் வேசை எம்.மகா உள்ளிட்ட சுமார் 1000 பேர் நேற்று காலை 11 மணிக்கு,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கட்சி தலைமை அலுவலகம் முற்றுகை குறித்து அதிமுக நிர்வாகிகள் கூறும்போது, “மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், அதிமுக கட்சிக்காக காலம் காலமாக உழைத்தவர்களுக்கு எந்த பதவியும் வழங்காமல், மாற்று கட்சியினரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு பதவி வழங்கி வருகிறார்.

பெரம்பூர் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய வீடுகளையும் தனக்கு வேண்டியவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வழங்குகிறார். இதுபற்றி கட்சி தலைமையிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்சியின் உண்மையான தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றாத மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பதவியை பறிக்க வேண்டும் என்று அதிமுக தலைமையிடம் கோரிக்கை வைத்துள்ளோம்” என்றனர்.

முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலரை மட்டுமே கட்சி தலைமை அலுவலகத்துக்குள் வரவழைத்து அவர்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது. பின்னர் கட்சி தலைமையிடம் சொல்லி, புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம் உறுதி அளித்ததை தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் கலைந்து சென்றனர். இதனால் சிறிது நேரம் ராயப்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories:

>