×

தேசிய கொடியை அவமதித்த விவகாரம்: பாஜ தலைவர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: போலீஸ் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தேசிய கொடியை அவமதித்ததாக தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மூத்த தலைவர் இல.கணேசன் மீதான புகாரில் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று, தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் மாநில தலைவர் எல்.முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் பலரும் பங்கேற்றிருந்தனர். இதையடுத்து, பாஜ கட்சி கொடி ஏற்றக்கூடிய கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி அவமரியாதை செய்ததாக பாஜ தலைவர் எல்.முருகன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோருக்கு எதிராக முகப்பேரை சேர்ந்த கே.ஆர்.குகேஷ் என்பவர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 17ம் தேதி புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காததால், உரிய முறையில் வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் குகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.ரவீந்திரன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கார்த்திக் ஆஜராகி, பாஜ கட்சி கொடிக்கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றியது தேசிய கொடி விதிகள் மற்றும் தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டத்தின் படி குற்றம் என்பதால்  எல்.முருகன் உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார்.

போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வக்கீல் பிரபாவதி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் குகேஷ் அளித்த புகார் மாம்பலம் காவல் நிலைத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அதன் மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். இதையடுத்து வழக்கில் மாம்பலம் காவல் நிலையத்தினரை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு உத்தரவிட்ட நீதிபதி, புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Tags : BJP , Contempt of National Flag: Case seeking action against BJP leader: Police report quality court order
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...