×

உங்களது வெற்றி திராவிட இயக்கத்துக்குநம்பிக்கை கொடுத்துள்ளது: கமலா ஹாரிசுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து கடிதம்

சென்னை: உங்களது வெற்றி திராவிட இயக்கத்துக்கு நம்பிக்கை கொடுத்துள்ளது என்று கமலா ஹாரிசுக்கு மு.க.ஸ்டாலின் தமிழில் எழுதிய வாழ்த்து கடிதத்தில் கூறியுள்ளார். அமெரிக்க துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும், கமலா ஹாரிசுக்கு மு.க.ஸ்டாலின், வாழ்த்து தெரிவித்து, தன் கைப்பட தமிழில் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நேற்று தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
அமெரிக்கா துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிஸ், தமிழகத்தின் மன்னார்குடி துளசேந்திரபுரத்தை தாய்வழி பூர்வீகமாக கொண்டவர். அவர் தமிழக தொடர்பினை நினைவூட்டும் வகையில், நம் தாய்மொழியாம் தமிழில் வாழ்த்து மடல் எழுதி அனுப்பியிருக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமலா ஹாரிசுக்கு தமிழில் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்க நாட்டின் மாட்சிமை தங்கிய துணை அதிபராக பொறுப்பேற்க இருக்கும் கமலா ஹாரிசுக்கு வணக்கம். வாழ்த்துகள். அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபர் என்பதோடு, நம் தமிழ்நாட்டை சேர்ந்த பெண்மணி என்பது, தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி. ‘’எல்லார்க்கும் எல்லாம்’’ என்ற உன்னத நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது தான் திராவிட இயக்கம். மனிதர்களுக்குள் பேதம் இல்லை என்பதை போலவே, ஆண்களுக்கு சரிநிகராக பெண்கள் அனைத்து நிலைகளிலும் மிக உன்னதமான இடத்தை அடைய வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, அதற்கான திட்டங்களை தீட்டிய இயக்கம்.

அத்தகைய இயக்கத்துக்கு, உங்களது வெற்றி, மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. ஒரு தமிழ்ப்பெண், அமெரிக்காவையும் ஆள தகுதி படைத்தவர் என்பதை, உங்களது கண்ணோட்டமும், கடின உழைப்பும் மெய்ப்பித்து காட்டியிருக்கிறது. உங்களது ஆட்சி காலம், அமெரிக்காவுக்கு மேலும் புகழ் சேர்த்து, தமிழர் தம் பாரம்பரிய பெருமையை உலகுக்கு பறை சாற்றுவதாக அமையட்டும். தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கி காத்திருக்கிறது. தங்களது வெற்றிக்கு மீண்டும் ஒரு முறை எனது மகிழ்ச்சியையும், மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

உங்களுக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே உங்களுக்கும், எனக்கும் இயற்கை வழங்கிய இணையற்ற வரமாக அமைந்திருக்கும் தாய்மொழியாம் தமிழில் இந்த கடிதத்தை எழுதி இருக்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : victory ,Dravidian ,MK Stalin ,Kamala Harris , Your victory has given hope to the Dravidian movement: MK Stalin's congratulatory letter in Tamil to Kamala Harris
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...