குளம் உருவாக்கி சுவர் கட்டிய கல்வெட்டு: ராமநாதபுரம் அருகே கண்டுபிடிப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே 134 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் உருவாக்கி, மதில் சுவர் கட்டியவர்கள் பற்றிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது வளநாடு. இங்கு 134 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டில் இருக்கும் இங்குள்ள ஒரு குளம் உருவாக்கப்பட்டு, திருமதில் அமைக்கப்பட்டதை இக்கல்வெட்டு காட்டுகிறது. வேளானூர் பள்ளி கணித ஆசிரியர் பேரையூர் முனியசாமி தெரிவித்த தகவலின்பேரில், தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு இக்கல்வெட்டைப் படி எடுத்துப் படித்து ஆய்வு செய்தார்.

இது குறித்து வே.ராஜகுரு கூறியதாவது: ‘‘வளநாடு முருகன் கோயில் வளாகத்தில் இரண்டரை அடி அகலமும், 1 அடி உயரமும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு பலகைக் கல்லில், 11 வரிகள் கொண்ட ஒரு கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.

‘கடவுள் கிருபையால் வளநாட்டில் சிறப்புற்று இருக்கும் கருப்பபிள்ளை, இவ்வூர் முருகன் கோயிலுக்கு வடக்கில் உள்ள திருக்குளத்தை உருவாக்கினார், பிறகு பேரன் குருந்தபிள்ளையாகிய தங்கச்சாமியாபிள்ளை அக்குளத்தைச் சுற்றி திருமதில் மற்றும் படி அமைத்துக் கொடுத்தார்’ என்ற தகவல், கிபி 1886ம் ஆண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் விய வருடம் சித்திரை மாதம் 29 என தமிழ் ஆண்டும், 1886, மே 2 என ஆங்கில ஆண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. துரைகள் மற்றும் கடவுள் அனுக்கிரகத்தால் இது கட்டப்பட்டது என தெரிவித்துள்ளதன் மூலம் ஆங்கிலேயர் அனுமதி பெற்று மதில் சுவர் கட்டியதாகத் தெரிகிறது. பெரிய அளவிலான இக்குளத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர் மூன்று அடி அகலத்தில் செங்கல், சுண்ணாம்பு கொண்டு கட்டப்பட்டுள்ளது. தற்போது மதில் சுவர் முழுவதும் சேதமடைந்து விழுந்து விட்டதால் அதில் இருந்த இக்கல்வெட்டு கோயில் பகுதிக்கு வந்திருக்கலாம். இங்கு கருப்பபிள்ளை பெயரில் ஒரு மடமும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>