×

கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே பெற்றோர்களிடம் கையெழுத்து: பள்ளிகளை திறக்க நிர்வாகங்கள் நடத்திய ரகசிய நாடகம் அம்பலம்

சென்னை: பள்ளிகள் திறப்பு குறித்த கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கு முன்பாகவே பள்ளிகளை திறக்க கோரி பெற்றோர்களிடம் கையெழுத்து வாங்கிய விவகாரம் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது வைரஸ் தொற்று குறைய தொடங்கியுள்ளதால் வரும் 16-ம் தேதி 9 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கொரோனா பரவலின் இரண்டாவது அலை உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் பள்ளிகள் திறப்பை ஜனவரி மாதம் வரை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பள்ளிகளை திறப்பது தொடர்பாக பெற்றோர்களின் கருத்தை அறிய அரசு முடிவு செய்தது. இதற்காக நடத்தப்படும் கருத்து கேட்பு கூட்டத்தில் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்தை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படியில் மாநிலத்தில் உள்ள 12,700 பள்ளிகளில் பெற்றோர்களின் கருத்து கேட்பு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

கூட்டத்தில் மருத்துவ பள்ளிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது தொடர்பாக அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றுமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தனர். இதனால் இந்த கருத்து கேட்பு கூட்டம் மாணவர்களின் மீதான அக்கரையில் நடைபெறுகிறதா? அல்லது அரசு விளம்பரப்படுத்திக் கொள்ள நடத்தப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு இருக்கையில் மறுபுறம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளில் பெற்றோர்களிடமும், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடமும் கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே பள்ளிகளை திறக்க விரும்புவதாக கையெழுத்து வாங்கப்பட்டு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பள்ளிகளை நடத்தினால் தான் முழு கட்டணத்தையும், இதர கட்டணத்தையும் வசூலிக்க முடியும் என்பதால் சில பள்ளிகள் இத்தகைய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை சீர்குலைப்பது போன்ற இத்தகைய செயல்களை தடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் கருத்து கேட்பு கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : parents ,consultation meeting ,schools ,administrations , Signature to parents without holding a consultation meeting: Secret play by administrations to open schools exposed
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...