பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பைனலில் ரஷ்ய வீரர் மெட்வடேவ் வெற்றி

பாரிஸ்: பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பைனலில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வரெவ்வை வீழ்த்தி, ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். நேற்று பாரிசில் நடந்த பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ்வும், ரஷ்ய வீரர் டேனில் மெட்வடேவும் மோதினர். ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் ஸ்வரெவ் 7ம் இடத்திலும், மெட்வடேவ் 4ம் இடத்திலும் உள்ளனர். முதல் செட்டில் ஸ்வரெவ் ஆதிக்கம் செலுத்தினார். மெட்வடேவும் போராடினார். இருப்பினும் அந்த செட்டை ஸ்வரெவ் 7-5 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அடுத்த 2 செட்களிலும் மெட்வடேவ் அபாரமாக ஆடினார். தனது மின்னல் வேக சர்வீஸ்கள் மற்றும் துல்லியமான பிளேஸ்மென்ட்கள் மூலம் ஸ்வரெவ்வை அவர் திணறடித்தார்.

2வது செட்டில் அவசரப்பட்டு நெட்டுக்கு ஏறி வந்த ஸ்வரெவ், அடுத்தடுத்து கேம்களை இழந்தார். இதனால் 2வது செட் 6-4 என மெட்வடேவ் வசமானது. 3வது செட்டில் ஸ்வரெவ் மொத்தமாக சரணடைந்து விட்டார். மெட்வடேவின் சர்வீஸ்களை அவரால் சரியான முறைகளில் திருப்ப முடியவில்லை. 3வது செட்டை மெட்வடேவின் சர்வீஸ் கேம்ஸ் என்றே கூற வேண்டும். இதனால் 6-1 என்ற கணக்கில் அந்த செட்டை எளிதாக மெட்வடேவ் கைப்பற்றினார். 2 மணி நேரம் 10 நிமிடங்கள் நடந்த இந்த இறுதிப்போட்டியில் 5-7, 6-4, 6-1 என்ற கணக்கில் வென்று, முதன் முறையாக பாரிஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை மெட்வடேவ் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இக்கோப்பையை கைப்பற்றும் 4வது ரஷ்ய வீரர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>