×

நாட்டின் சாமானிய மக்களுக்கு 2022ம் ஆண்டுதான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தகவல்

சென்னை: நாட்டின் சாமானிய மக்களுக்கு 2022ம் ஆண்டு தான் கொரோனா தடுப்பூசி கிடைக்கும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். சீனாவின் வுஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 50,728,891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 35,792,588 பேர் குணமடைந்துள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 12 லட்சத்து 61 ஆயிரத்து 971 பேர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து, உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பல்வேறு நாடுகளும் கண்டுபிடித்துள்ள தடுப்பூசிகள் பல்வேறு கட்டங்களில் சோதனையில் உள்ளது. கொரோனா வைரஸ் பெருந்தொற்று வராமல் தடுப்பதற்கான தடுப்பூசி எப்போது வரும் என நாட்டு மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்தியாவில் சாமானிய மக்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசி 2022ம் ஆண்டுதான் கிடைக்கும் என எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், இந்தியா அதிக மக்கள்தொகை கொண்ட நாடு என்பதால் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க சற்று காலம் ஆகும் என்றும் கூறியுள்ளார். சந்தையில் இருந்து காய்ச்சல் தடுப்பூசி போன்று கொரோனா தடுப்பூசியை எவ்வாறு வாங்க முடியும் என்பதை பார்க்க எங்களுக்கு அவகாசம் தேவைப்படுவதாக டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார். குளிர்பதன கிடங்குகளில் பராமரிப்பு, தேவையான எண்ணிக்கையில் சிரஞ்சிகள், போதுமான ஊசிகள் உள்ளிட்டவை தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் கடைக்கோடி பகுதிக்கும், தங்கு தடையின்றி கொரோனா தடுப்பூசியை வழங்குவது மிகப்பெரிய சவாலாகும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் தெரிவித்துள்ளார்.


Tags : country ,population ,Ames Hospital , Ordinary People, 2022, Corona Vaccine, Director of Ames Hospital
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...