ஒரு அறைக்கு ஒரு மாணவர்: கொரோனா நெகடிவ் சான்றிதழ் இருந்தாலும் 14 நாட்கள் தனிமை...கல்லூரி விடுதிகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டது யூஜிசி.!!!

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இருப்பினும், பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த பள்ளி, கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழலில் கல்வி நிறுவனங்களை திறக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றோம். ஆலோசனை நிறைவுபெற்று இறுதி முடிவு வருகின்ற 12ம் தேதி அறிவிக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) வெளியிட்டுள்ளது.

அதில், கல்லூரிகள் திறக்கப்படும்போது விடுதிகளில் ஒரு அறைக்கு ஒரு மாணவரை மட்டுமே தங்க வைக்க வேண்டும். கல்லூரிகள் திறக்கப்பட்ட பின் வரும் விடுதி மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா இல்லை என சான்றிதழ் கொண்டுவந்தாலும் மாணவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். மாணவர்கள் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதால் விடுதிகளில் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>