×

திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுது: 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதானதால் தமிழக-கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக தமிழகம்-கர்நாடகம் இரு மாநிலங்களுக்கு இடையே 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் இருந்து சாக்லேட் பாரம் ஏற்றிய கன்டெய்னர் லாரி கேரள மாநிலம் கொச்சின் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்தது. அப்போது 8வது கொண்டை ஊசி வளைவில் லாரி திரும்பும்போது பழுது ஏற்பட்டு நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக திம்பம் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் அணிவகுத்து நின்றன.

இது குறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு லாரியை நகர்த்தும் பணி நடைபெற்றது. 3 மணி அளவில் லாரி நகர்த்தி நிறுத்தப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. லாரி பழுது காரணமாக திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Tags : Thimphu Hill Road , Transportation, Sathyamangalam, timpam, mountain
× RELATED திம்பம் மலைப்பாதையில் இரவில் வாகனப்...