திருப்புவனம் அருகே மோட்டாரில் வயல்களுக்கு பாயும் கண்மாய்நீர்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே ஏனாதி ஊராட்சி குயவன்குளத்தில் மழையை நம்பியே விவசாய பணிகள் நடைபெறுகின்றன. சமீபத்திய மழையை நம்பி விவசாயிகள் கடன் வாங்கி நெல் பயிரிட்டுள்ளனர். நாற்று நடவு செய்தபின் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கண்மாயில் மழை தண்ணீர் இருந்தாலும் மடைகள் அனைத்தும் சேதமடைந்து இருப்பதால் வயல்களுக்கு பாய்ச்ச முடியவில்லை. மேலும் தொடர்ந்து மழை பெய்யவில்லை. இதனால் பயிர்கள் கருகும் அபாயம் நிலவுகிறது.

எனவே வேறு வழியின்றி டிராக்டரில் மோட்டார் பம்ப்செட் பொருத்தி கண்மாய் நீரை வயல்களுக்கு பாய்ச்சி வருகின்றனர். இது குறித்து விவசாயி சொக்கப்பன் கூறுகையில், ‘‘மூன்று ஏக்கர் நெல் பயிரிட்டுள்ளேன். மழையை நம்பி நாற்று நட்டு அதனை பறித்து நடவும் செய்து விட்டேன், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகி வருகின்றன. கண்மாயில் உள்ள நான்கு மடைகளில் நடு மடை உடைந்து கற்கள் சரிந்து தண்ணீர் செல்லும் பாதையை அடைத்துவிட்டன. மடைப்பகுதி மேடாகவும் தண்ணீர் உள்ள பகுதி பள்ளமாகவும் உள்ளது. இதனை சரி செய்ய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மடையை தனியாக சீரமைக்க முடியாது.

எனவே நான் எனது மனைவி, மகள், மருமகன், குழந்தைகள் அனைவரும் சேர்ந்து கற்களை மட்டும் அகற்றிவிட்டு டிராக்டரில் மோட்டார் பம்ப்செட் பொருத்தி தண்ணீர் இறைத்து வயல்களுக்கு பாய்ச்சி வருகிறேன். இன்னும் இரு நாட்கள் இரைத்தால் ஓரளவிற்கு பயிர்களை காப்பாற்றி விடலாம். கண்மாயிலும் ஓரளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. மடைகளை மாவட்ட நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும்’’ என்றார்.

Related Stories:

>