துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்கள் கல்குவாரி குட்டையில் மூழ்கி சிறுமி உட்பட 2 பேர் பலி

வேட்டவலம்: கர்நாடக மாநிலம், பெங்களூரு கே.எஸ்.கார்டன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்(40), கூலி தொழிலாளி. இவரது அண்ணன் மகள் ஹரிணி(13), 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம், இவர்கள் இருவரும் தங்களது உறவினர்களுடன், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு, துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் சுரேஷ், ஹரிணி மற்றும் உறவினர்கள் சிலர், அருகில் உள்ள கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றனர். பின்னர், சுரேஷ், ஹரிணி ஆகிய இருவரும் குளிப்பதற்காக குட்டையில் இறங்கினர். சமீபத்தில் பெய்த மழை காரணமாக குட்டையில் தண்ணீர் அதிகமாக இருந்தது. இதையறியாமல் ஆழமான பகுதிக்கு சென்ற இருவரும் திடீரென நீரில் மூழ்கி தத்தளித்தனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சிடைந்த உறவினர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வேட்டவலம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரசுராமன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களால் சுரேஷ், ஹரிணியை சடலமாகவே மீட்க முடிந்தது. இதையடுத்து, வேட்டவலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் மற்றும் போலீசார், இரண்டு சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>