×

தூத்துக்குடி - நெல்லை வழித்தடம் வல்லநாட்டில் அடிக்கடி உடையும் 4 வழிச்சாலை பாலம்: மத்திய நிபுணர்கள் குழு நேரில் ஆய்வு

நெல்லை: நெல்லை அருகேயுள்ள வல்லநாடு புதிய ஆற்றுப்பாலம், சேதமடைந்த பகுதிகளை மத்திய சாலை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் அடங்கிய ராட்சத வாகனங்களை பாலத்தில் நிறுத்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி - காஷ்மீர் இடையே தேசிய நெடுஞ்சாலையுடன் தூத்துக்குடி துறைமுகத்தை இணைக்கும் வகையில் கடந்த 2010ம் ஆண்டு நெல்லையில் இருந்து தூத்துக்குடி வரை ரூ.349.50 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது. நான்கு வழிச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக நெல்லை அருகேயுள்ள வல்லநாடு ஆற்றுப்பாலம் அமைக்கப்பட்டு கடந்த 2013ம் ஆண்டு முதல் போக்குவரத்து நடந்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

முன்னதாக நான்கு வழிச்சாலை பணிகளை முதலில் டெண்டர் எடுத்த ஒப்பந்தகாரர் திடீரென பணிகளை பாதியில் நிறுத்தி சென்று விட்டார். இதனால் நீண்டகாலமாக பணிகள் முழுமையாக முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டு புதிய ஒப்பந்ததாரர் மூலம் பாலம் பணிகள் கட்டி முடிக்கப்பட்டு 4 வழிச்சாலையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. 2017ம் ஆண்டு புதிய பாலத்தின் ஒரு பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. மேலும் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது.

இதனால் பாலத்தின் போக்குவரத்து நிறுத்தப்பட்டு சேதம் அடைந்த இடங்களில் சீரமைப்பு பணிகள் மேற்ெகாள்ளப்பட்டது. மேலும் இரட்டை புதுப்பாலத்தில் பைபர் ஷீட் விரிக்கப்பட்டது. பின்னர் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதனிடையே கடந்த மார்ச் மாதத்தில் மீண்டும் 2 இடங்களில் பாலத்தில் சேதம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 14-03-2020 முதல் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன. ஆனால் பாலத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்காத நிலையில் பாலத்தின் ஒரு பகுதியில் மட்டும் ஒருவழிப்பாதையாக போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வல்லநாடு ஆற்றுப்பாலத்தை ஆய்வு செய்யுமாறு மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடிதம் எழுதியது. இதன்படி டெல்லியில் இருந்து 13 பேர் கொண்ட நிபுணர் குழுவினர் வந்துள்ளனர். இவர்கள் வல்லநாடு ஆற்றுப்பாலத்தில் நேற்று ஆய்வு நடத்தினர். அதிநவீன கருவிகள் மற்றும் இயந்திரங்கள் உள்ளடக்கிய மெகா வாகனங்களை பாலத்தில் நிறுத்தி ஆய்வு நடத்தப்பட்டது. தூண்களின் ஸ்திரதன்மை, பாலத்தில் டெக் எனப்படும் இணைப்பு கான்கிரீட் பகுதிகள் ஆகியவற்றின் ஸ்திரதன்மை ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர்.

பாலத்தின் வழியாக அதிக அளவு எடையை ஏற்றிச் செல்லும் வாகனங்களின்  தாங்கும் சக்தி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவில் பாலத்தில் சேதப்பகுதியை மட்டும் மீண்டும் சேதம் ஏற்படாத வகையில் சீர்படுத்த முடியுமா? அல்லது மீண்டும் மீண்டும் உடையும் டெக் பகுதிகளை முழுமையாக இடித்து அகற்றிவிட்டு புதியதாக கட்ட வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும் எனத்தெரிகிறது. இக்குழு அறிக்கும் அறிக்கையின் அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : bridge ,Thoothukudi - Nellai ,experts ,team , 4 Way, Bridge, Central Expert Group, Survey
× RELATED ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை ஒருவழிப்பாதையாக மாற்றம்..!!