×

சிறுமலை வனப்பகுதியில் நாட்டு துப்பாக்கிகள் வீச்சு: மீண்டும், மீண்டும் சிக்குவதால் பரபரப்பு

திண்டுக்கல்: சிறுமலை வனப்பகுதியில் வீசப்பட்ட நாட்டு துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றி, வீசியவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து இப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் சிக்குவதால் போலீசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை சுற்றுவட்டாரத்தில் பெரும்பாலானோர் நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டு துப்பாக்கிகளை உடனடியாக போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி ரவளிபிரியா எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் சிறுமலை அருகே தென்மலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் 4 நாட்டு துப்பாக்கிகள் கிடந்தன.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் கொடுத்த தகவலின்பேரில், திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் தெய்வம், எஸ்ஐ அழகுபாண்டி, வனச்சரகர் மனோஜ் மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று 4 நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 துப்பாக்கி குழல்களை கைப்பற்றினர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வனப்பகுதியில் துப்பாக்கிகளை வீசி சென்ற மர்மநபர்கள் யார், இவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என விசாரித்து வருகின்றனர். கடந்த அக். 13ம் தேதி சிறுமலை வனப்பகுதியில் 28 நாட்டுத்துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இப்பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் சிக்கி வருகின்றன. வேட்டை அல்லது சமூக விரோதச் செயல்கள் நடக்கிறதா என போலீசார், வனத்துறையினர் விசாரிக்கவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : forest ,Sirumalai , சிறுமலை, வனப்பகுதி
× RELATED 50 யானைகளை ஜவளகிரிக்கு விரட்ட வனத்துறையினர் தீவிரம்