டெல்லி, ஒடிசாவிற்கு தடை: காற்று மாசு உள்ள 122 நகரங்களில் 2 மணி நேரம் பசுமைப்பட்டாசு வெடிக்க அனுமதி...தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பு

டெல்லி: இந்தியாவில் டெல்லி மற்றும் ஒடிசாவில் பட்டாசு வெடிக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடைவிதித்துள்ளது. காற்று மாசு காரணமாக டெல்லி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நவம்பர் 7 முதல் 30 வரை பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. இதே விவகாரம் தொடர்புடைய மனுக்களை தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே.கோயல் தலைமையிலான அமர்வு கடந்த புதன்கிழமை விசாரித்தது. அப்போது பிறப்பித்த உத்தரவில், பட்டாசுகளை விற்கவும், வெடிக்கவும் ராஜஸ்தான், ஒடிசா மாநிலங்கள் தடைவிதித்துள்ளன.

காற்று மாசு அதிகமுள்ள நகரங்களை கொண்ட மாநிலங்களிலும், பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கலாமா என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளது. எனவே, ஒடிசா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை விதித்துள்ளதால், நோட்டீஸ் அனுப்ப தேவையில்லை. அதே நேரம், காற்றின் தரம் குறைந்த மாநிலங்களில் நவம்பர் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து காற்று மாசு நிலவும் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, அசாம், பீகார், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 18 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே, பட்டாசு வெடிக்கத் தடை கோரும் விவகாரம் தொடர்பான மனுக்கள் தொடர்பாக எழுத்துப்பூர்வமான வாதங்களை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தாக்கல் செய்த நிலையில், வழக்கில் நீதிபதி ஏ.கே. கோயல் தலைமையிலான தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், டெல்லி மற்றும் ஒடிசா மாநிலத்தில் இன்று நள்ளிரவு முதல் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கவும் விற்பனை செய்யவும் பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் காற்று மாசு உள்ள 122 நகரங்களில் 2 மணி நேரம் பசுமைப்பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது.

Related Stories:

>