×

கொரோனா அச்சத்திற்கு மத்தியில் மியான்மர் தேர்தல்!: வாக்கு எண்ணிக்கையில் ஆங் சான் சூகி கட்சி முன்னிலை..மீண்டும் ஆட்சியை பிடிப்பதால் சூகி ஆதரவாளர்கள் உற்சாகம்..!!

மியான்மர்: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் விறுவிறுப்புடன் நடந்து முடிந்த மியான்மர் தேர்தலில் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மர் நாடாளுமன்றத்தில் இரு அவைகள் மற்றும் 7 மாநில சட்டப்பேரவைகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் அவரவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளும் கட்சியான ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகிப்பதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுகுறித்து அக்கட்சியினர் தெரிவித்ததாவது, தேர்தல் வெற்றியை கொண்டாட பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூடுவதால் வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்பதை நாங்கள் உணர்கிறோம். அதனால் வெற்றியை வீட்டில் இருந்தே கொண்டாடும்படி எங்களது ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறோம். இன்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். கட்டுப்பாடுகளை மதித்து, தேர்தல் வெற்றியை எளிமையாக கொண்டாடுவோம் என குறிப்பிட்டார். மியான்மரில் 50 ஆண்டுகால ராணுவ ஆட்சிக்கு பிறகு கடந்த 2015ல் ராணுவத்தின் உதவியுடன் பொது தேர்தல் நடைபெற்றது. ராணுவ ஆட்சியை எதிர்த்து போராடிய ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி பலவீனமாக இருப்பதால் ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி ஆட்சியை தக்க வைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.


Tags : election ,Myanmar ,Aung San Suu Kyi ,party , Corona fear, Myanmar election, vote count, Aung San Suu Kyi party lead
× RELATED ஆங் சான் சூகி வீட்டு சிறைக்கு மாற்றம்