×

ஸ்டாய்னிஸ், தவான், ஹெட்மயர் அதிரடி: பைனலுக்கு முன்னேறியது டெல்லி

அபுதாபி: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான குவாலிபயர்-2 ஆட்டத்தில், 17 ரன் வித்தியாசத்தில் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது. நாளை நடைபெறும் பைனலில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் பிரித்வி ஷா, சாம்ஸ் நீக்கப்பட்டு ஹெட்மயர், ஷிவம் துபே இடம் பெற்றனர். சன்ரைசர்ஸ் மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. ஸ்டாய்னிஸ், தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர்.

ஸ்டாய்னிஸ் எடுத்த எடுப்பிலேயே அதிரடியில் இறங்க, டெல்லி ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. அவருக்குப் போட்டியாக தவானும் தன் பங்குக்கு பவுண்டரிகளை விரட்ட, 5 ஓவரிலேயே டெல்லி 50 ரன்னை எட்டியது. ஐதராபாத் வீரர்கள் பீல்டிங்கில் சற்று மெத்தனமாக செயல்பட்டதும் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. சராசரியாக ஓவருக்கு 10 ரன் என ஸ்கோர் எகிறிக்கொண்டே இருக்க, ஐதராபாத் அணியினர் பதற்றமடைந்தனர்.
ஸ்டாய்னிஸ் 38 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டானார். டெல்லி தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 86 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து தவானுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் இணைந்தார். தவான் 26 பந்தில் ஒரு இமாலய சிக்சருடன் அரை சதத்தை நிறைவு செய்தார். டெல்லி அணி 9.4 ஓவரில் 100 ரன்னை எட்டியது. இந்த நிலையில் ரஷித், நடராஜன் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, டெல்லி ஸ்கோர் வேகம் சற்றே மட்டுப்பட்டது. ஷ்ரேயாஸ் 21 ரன் (20 பந்து, 1 பவுண்டரி) எடுத்து ஹோல்டர் வேகத்தில் பாண்டே வசம் பிடிபட்டார். அபாரமாகப் பந்துவீசிய ரஷித் தனது 4 ஓவரில் 26 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் தவான் - ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஸ்கோரை உயர்த்த டெல்லி 16.2 ஓவரில் 150 ரன்னை எட்டியது.

ஐதராபாத் வீரர்கள் பீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பியதும் டெல்லி அணியின் ரன் குவிப்புக்கு உதவியது. தவான் 78 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சந்தீப் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி பெவிலியன் திரும்பினார். சந்தீப், நடராஜன் வீசிய கடைசி 2 ஓவரில் 13 ரன் மட்டுமே கிடைக்க (ஒரு பவுண்டரி கூட இல்லை), டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ஹெட்மயர் 42 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற கடினமான இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

ஆனால் வார்னர், ப்ரியம் கார்க் மணிஷ்பாண்டே ஆகியோர் சொற்ப ரன் எடுத்து அவுட்டாகினர். இதனால் வில்லியம்சன்-ஹோல்டர் இணை ஒன்றும் இரண்டுமாக அடிக்க அடித்தனர். வாய்ப்பு கிடைத்தபோது ஹோல்டர் பவுண்டரி விளாசவும் தவறவில்லை. ஹோல்டர் 11 ரன்னில் அவுட்டனார். அபாரமாக ஆடி வந்த வில்லியம்சன் 67 ரன்னின் அவுட்டனார். இறுதியில் சமத் 33 ரன் அடித்தார். எனினும் கடைசி கட்டத்தில் ரபாடா ஒரே ஓவரில் 3 விக்கெட்டை எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேப்டல் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.


Tags : Dhawan ,final , Steinis, Dhawan, Hedmeyer Action: Delhi advance to final
× RELATED ராஜஸ்தானுக்கு 5வது வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் ஏமாற்றம்