×

மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர்நோவாஸ்-டிரெய்ல்பிளேசர்ஸ் இன்று இறுதி போட்டியில் மோதல்

ஷார்ஜா: மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் இறுதிப் போட்டியில், சூப்பர்நோவாஸ் - டிரெய்ல்பிளேசர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருடன் இணைந்து நடத்தப்பட்டு வரும் மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் மித்தாலி ராஜ் தலைமையிலான வெலாசிட்டி, ஹர்மான்பிரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் மற்றும் ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான டிரெய்ல்பிளேசர்ஸ் அணிகள் லீக் சுற்றில் விளையாடின. ஒவ்வொரு அணியும் மற்ற 2 அணிகளுடன் தலா ஒரு முறை மோதியதில், மூன்று அணிகளுமே தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

இதைத் தொடர்ந்து ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகித்த டிரெய்ல்பிளேசர்ஸ் (+2.109), சூப்பர்நோவாஸ் (-0.054) அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. கடைசி இடம் பிடித்த வெலாசிட்டி அணி (-1.869) ஏமாற்றத்துடன் வெளியேறியது. இந்த நிலையில், கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்யும் பரபரப்பான பைனலில் சூப்பர்நோவாஸ் - டிரெய்ல்பிளேசர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன. இப்போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. இரு அணிகளும் மோதிய கடைசி லீக் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் 2 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

அந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சூப்பர்நோவாஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன் குவித்தது. சமாரி அத்தப்பட்டு ஜெயாங்கனி அதிகபட்சமாக 67 ரன் (48 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். பிரியா பூனியா 30, கேப்டன் ஹர்மான்பிரீத் 31 ரன் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய டிரெய்ல்பிளேசர்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 2 ரன் வித்தியாசத்தில் தோற்றது. டோட்டின் 22, கேப்டன் மந்தனா 33, தீப்தி ஷர்மா 43*, ஹர்லீன் தியோல் 27 ரன் எடுத்தனர். சூப்பர்நோவாஸ் பந்துவீச்சில் ஷகீரா செல்மன், ராதா யாதவ் தலா 2, அனுஜா 1 விக்கெட் வீழ்த்தினர்.

ஜெயாங்கனி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். இந்த நிலையில், பைனலில் இன்று மீண்டும் இதே அணிகள் கோப்பையை முத்தமிடும் முனைப்புடன் வரிந்துகட்டுகின்றன. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி கடைசி பந்து வரை விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Tags : clash ,Women's T20 Challenge: Supernovas-Trailblazers , Women's T20 Challenge: Supernovas-Trailblazers clash in final today
× RELATED நுங்கம்பாக்கம் செயல் வீரர்கள்...