×

ஸ்டாய்னிஸ், தவான், ஹெட்மயர் அதிரடி: சன்ரைசர்சுக்கு 190 ரன் இலக்கு

அபுதாபி: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான குவாலிபயர்-2 ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 190 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அந்த அணியில் பிரித்வி ஷா, சாம்ஸ் நீக்கப்பட்டு ஹெட்மயர், ஷிவம் துபே இடம் பெற்றனர். சன்ரைசர்ஸ் மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது. ஸ்டாய்னிஸ், தவான் இருவரும் டெல்லி இன்னிங்சை தொடங்கினர். ஸ்டாய்னிஸ் எடுத்த எடுப்பிலேயே அதிரடியில் இறங்க, டெல்லி ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அவருக்குப் போட்டியாக தவானும் தன் பங்குக்கு பவுண்டரிகளை விரட்ட, 5 ஓவரிலேயே டெல்லி 50 ரன்னை எட்டியது. ஐதராபாத் வீரர்கள் பீல்டிங்கில் சற்று மெத்தனமாக செயல்பட்டதும் டெல்லி பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமைந்தது. சராசரியாக ஓவருக்கு 10 ரன் என ஸ்கோர் எகிறிக்கொண்டே இருக்க, ஐதராபாத் அணியினர் பதற்றமடைந்தனர். ஸ்டாய்னிஸ் 38 ரன் (27 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ரஷித் கான் சுழலில் கிளீன் போல்டானார். டெல்லி தொடக்க வீரர்கள் முதல் விக்கெட்டுக்கு 8.1 ஓவரில் 86 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து தவானுடன் கேப்டன் ஷ்ரேயாஸ் இணைந்தார்.

தவான் 26 பந்தில் ஒரு இமாலய சிக்சருடன் அரை சதத்தை நிறைவு செய்தார். டெல்லி அணி 9.4 ஓவரில் 100 ரன்னை எட்டியது. இந்த நிலையில் ரஷித், நடராஜன் துல்லியமாகப் பந்துவீசி நெருக்கடி கொடுக்க, டெல்லி ஸ்கோர் வேகம் சற்றே மட்டுப்பட்டது. ஷ்ரேயாஸ் 21 ரன் (20 பந்து, 1 பவுண்டரி) எடுத்து ஹோல்டர் வேகத்தில் பாண்டே வசம் பிடிபட்டார். அபாரமாகப் பந்துவீசிய ரஷித் தனது 4 ஓவரில் 26 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். கடைசி கட்டத்தில் தவான் - ஹெட்மயர் ஜோடி அதிரடியாக ஸ்கோரை உயர்த்த டெல்லி 16.2 ஓவரில் 150 ரன்னை எட்டியது. ஐதராபாத் வீரர்கள் பீல்டிங்கில் தொடர்ந்து சொதப்பியதும் டெல்லி அணியின் ரன் குவிப்புக்கு உதவியது.

தவான் 78 ரன் (50 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி சந்தீப் வேகத்தில் எல்பிடபுள்யு ஆகி பெவிலியன் திரும்பினார். சந்தீப், நடராஜன் வீசிய கடைசி 2 ஓவரில் 13 ரன் மட்டுமே கிடைக்க (ஒரு பவுண்டரி கூட இல்லை), டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 189 ரன் குவித்தது. ஹெட்மயர் 42 ரன் (22 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), பன்ட் 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஐதராபாத் பந்துவீச்சில் சந்தீப், ஹோல்டர், ரஷித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 190 ரன் எடுத்தால் பைனலுக்கு முன்னேறலாம் என்ற கடினமான இலக்குடன் சன்ரைசர்ஸ் களமிறங்கியது.

Tags : Dhawan , Steinis, Dhawan, Hedmeyer Action: Sunrisers 190-run target
× RELATED இஸ்ரோ தகவல் இன்சாட் 3டிஎஸ் விண்கலம் பூமியை படம் எடுத்தது