×

அமெரிக்க மக்கள் அனைவரிடமும் ஒற்றுமையை வளர்ப்பேன்: பிடென் உறுதிமொழி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பிடென், ‘வேற்றுமை பார்க்காமல் ஒற்றுமையை வளர்க்கும் அதிபராக இருப்பேன்’ என உறுதிமொழி அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் டெனால்ட் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடெனும் போட்டியிட்டனர். மொத்தம் 16 கோடி வாக்குகள் பதிவாகின. இதில் தபால் ஓட்டுகள் மட்டுமே 10 கோடி என்பதால் வாக்கு எண்ணிக்கை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கமாக தேர்தல் முடிந்த அடுத்த நாளே யார் வெற்றி பெறுவார் என்பது தெரிந்து விடும் நிலையில், 4 நாட்களாக வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் அதிகமான எலக்டோரல் வாக்குகளை பிடென் நேற்று முன்தினம் எட்டினார்.

பென்சில்வேனியா, நெவாடா, அரிசோனா ஆகிய முக்கிய மாகாணங்களில் பிடென் அடுத்தடுத்து வெற்றி பெற 538 எலக்டோரல் வாக்குகளில் 290 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். டிரம்ப் 214 வாக்குகளுடன் பரிதாபமாக தோற்றார். இதைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 46வது அதிபராக பிடென் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடைய வெற்றியை அமெரிக்க மக்களும், ஆதரவாளர்களும் கோலாகலமாக ஆட்டம் ஆடியும், பாட்டு பாடியும் வீதிகளில் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர். தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிடென் தனது சொந்த ஊரான டெலாவரில் நேற்று முன்தினம் இரவு வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

அதில் அவர் கூறியதாவது: வேற்றுமையை பாராமல், ஒற்றுமை வளர்க்கும் அதிபராக நான் இருப்பேன் என உறுதி ஏற்றுக் கொள்கிறேன். சிவப்பு நிற (டிரம்ப் கட்சி நிறம்) மாகாணங்கள் நீல நிற (பிடென் கட்சி நிறம்) மாகாணங்கள் என பிரித்து பார்க்காமல்,  ஒன்றிணைந்த அமெரிக்காவாகவே பார்ப்பேன். எந்த வேறுபாடும் இன்றி அனைத்து மக்களுக்காகவும் பாடுபடுவேன். அமெரிக்காவின் ஆன்மாவை மீட்டெடுக்கவும்,  நாட்டில் ஒற்றுமையை உருவாக்கவும்தான் இந்த பதவிக்கு நான் வந்துள்ளேன்.

இப்போது நாம் நம் நாட்டை குணப்படுத்த வேண்டிய சூழலில் இருக்கிறோம். எனவே எனது முதல் பணி கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதுதான். இவ்வாறு பிடென் கூறினார். அவரைத் தொடர்ந்து துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் பேசுகையில், ‘‘அமெரிக்காவுக்கு நீங்கள் புதிய நாளைத் தொடங்கியுள்ளீர்கள். நம்பிக்கையை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். தனி மனுஷியாக என் அம்மா என்னை வளர்த்தெடுத்தார். அவரை நான் இந்த தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்’’ என்றார்.

இதற்கிடையே, பிடென் தலைமையிலான புதிய அரசு நிர்வாகம் இந்தியா-அமெரிக்கா உறவை பலப்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என பிடெனின் பிரசார குழு கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிடென் அரசின் கொள்கைகள் தொடர்பான அந்த அறிக்கையில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா தொடர்ந்து முயற்சிக்கும், தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு தொடர்ந்து வழங்கப்படும், பருவநிலை மாற்றம், சுகாதாரம் மற்றும் இருதரப்பு வர்த்தகம் உள்ளிட்ட பல விவகாரங்களிலும் இருதரப்பு உறவு பலப்படுத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

* ஆடல் பாடலுடன் கொண்டாட்டம்
பிடென் பெரும்பான்மை எண்ணிக்கையை எட்டி விட்டதாக செய்திகள் வெளியானதும், அமெரிக்கா முழுவதும் மக்கள் ஆடல், பாடலுடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். முக்கிய சாலை ஓரங்களிலும், கடற்கரைகளிலும் பாடல்களை ஒலிக்கவிட்டு கூட்டாக நடனமாடி மகிழ்ந்தனர். வெள்ளை மாளிகை அருகிலும் பலர் கூடி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நிறவெறி விவகாரத்தில் டிரம்ப் மீது பயங்கர ஆத்திரத்தில் இருக்கும் கறுப்பின மக்கள் சந்தோஷத்தில் திளைத்ததை பல இடங்களிலும் காண முடிந்தது. கறுப்பின தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் பிடெனின் வெற்றியை வரவேற்றுள்ளனர்.

Tags : American ,Biden , I will foster unity among all the American people: Biden pledge
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...