×

விருத்தாசலத்தில் கைதி இறந்த விவகாரம் காவல்நிலையம், கிளை சிறையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை தீவிரம்: சாத்தான்குளம் போன்று விஸ்வரூபம் எடுக்கிறது

விருத்தாசலம்: சிறையில் கைதி இறந்த விவகாரம் தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலையம் மற்றும் விருத்தாசலம் கிளை சிறையில் சிபிசிஐடி போலீசார் நேற்று விசாரணையை துவங்கினர். கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே வடக்குத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் செல்வமுருகன்(39), முந்திரி வியாபாரி. இவரது மனைவி பிரேமா ஒரு மகள், மகன் உள்ளனர். இவர்மீது வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளதாகவும், கடந்த மாதம் 28ம் தேதி ஒரு பெண்ணிடம் செயின் பறித்ததாகவும் கூறி நெய்வேலி நகர போலீசார் கைது செய்து, விருத்தாசலம் கிளை சிறையில் 30ம் தேதி அடைத்தனர்.

கடந்த 2ம் தேதி செல்வமுருகனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் மீண்டும் 4ம் தேதி வலிப்பு ஏற்பட்டதால் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு இறந்தார். மாஜிஸ்திரேட் ஆனந்த் வீடியோ ஆதாரத்துடன், செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் உறவினர்களிடம் நீதி விசாரணை மேற்கொண்டார். கணவரை போலீசார் சித்ரவதை செய்து கொன்று விட்டதாக பிரேமா புகார் கூறினார். உறவினர்களுடன் சேர்ந்து மறியலில் ஈடுபட்டார்.

இதையடுத்து கடலூர் மாவட்ட பகுதியில் இவ்விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கட்சியினர் மற்றும் சமூகஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நேற்று முன்தினம் விருத்தாசலம் கிளை  சிறையில் அதிகாரிகள் மற்றும் கைதிகளிடம் மாஜிஸ்திரேட் ஆனந்த் 3 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார். சிபிசிஐடி போலீசார் நேற்று புதிதாக வழக்கு பதிந்து விசாரணையை தொடங்கினர்.

இன்ஸ்பெக்டர் தீபா தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று பகல் 12 மணியளவில் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், எஸ்ஐ சிவராமன் உள்ளிட்ட 7 குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒன்றரை மணி நேரம் துருவி துருவி விசாரணை நடத்தினர். அதன்பின்னர் விருத்தாசலம் கிளைச் சிறையிலும் விசாரணை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் போலீசார் தாக்கியதில் சிறையில் இறந்த சம்பவம் போன்று இச்சம்பவமும் நடந்துள்ளதாக கூறி அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளால் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கணவன் இறப்புக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என செல்வமுருகனின் மனைவி பிரேமா கூறியுள்ளார்.


Tags : death ,prisoner ,police station ,Vriddhachalam ,CPCIT ,branch ,jail , CBCID police probe into Vriddhachalam prisoner's death at police station, branch jail
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்