அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பிடென், கமலா ஹாரிசுக்கு கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: அமெரிக்க அதிபராக ஜோ பிடென், துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிசுக்கு துணை முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஓ.பன்னீர்செல்வம்(துணை முதல்வர்): அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ் பெண்களின் திறமையை மீண்டும் ஒரு முறை உலகிற்கு எடுத்துரைக்கிறார் கமலா ஹாரிஸ். ராமதாஸ் (பாமக நிறுவனர்): அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்த நாட்டின் 46வது அதிபராக ஜோ பிடெனும், துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிசும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள இருவருக்கும் வாழ்த்துகள்.இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி காண  அவரது வெற்றி உதவட்டும். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): அமெரிக்காவில் இந்திய இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதற்கு, டிரம்ப் ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் இனி தளரும். தாய் வழியில் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்கக் குடியரசுத் துணைத் தலைவராகப் பொறுப்பு ஏற்கின்றார் என்ற செய்தி உலகத் தமிழர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

டிடிவி தினகரன் (அமமுக பொதுச்செயலாளர்): அமெரிக்க வரலாற்றில் முதன் பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் வம்சாவளியைச்சேர்ந்த கமலா ஹாரிசுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகள். விஜயகாந்த் (தேமுதிக தலைவர்): இந்திய வம்சாவளியும், தமிழகத்தை சேர்ந்தவருமான கமலாஹாரிஸ் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறேன். இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை.

Related Stories:

>