இடி தாக்கியதில் புதுவை சட்டசபை கட்டிடம் சேதம்

புதுச்சேரி: புதுச்சேரி விக்டர் சிமோனல் வீதியில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் சட்டசபை இயங்கி வருகிறது. இப்பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு இடி,மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது, சட்டசபையின் பின்புறம் உள்ள இணைப்பு கட்டிடத்தின் 4வது மாடியில் இடி, மின்னல் தாக்கியது. இதில், மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டியின் தடுப்புச் சுவர் உடைந்து நாலாபுறமும் தெறித்தது. இந்த இடிபாடுகள் சட்டசபை கமிட்டி அறை வரை விழுந்தது. வளாகத்தில் நிறுத்தியிருந்த சட்டசபை செயலகத்துக்கு சொந்தமான 3 கார்களின் கண்ணாடி உள்ளிட்ட பாகங்கள் உடைந்து சேதமடைந்தன.

இரவு நேரத்தில் இடி தாக்கியதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. இது பற்றி காவலர்கள் சட்டசபை செயலர் முனிசாமிக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சேதமடைந்த பகுதிகளை முதல்வர் நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்து, சட்டசபை செயலர் முனிசாமி ஆகியோர் நேற்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டனர். சட்டசபை கட்டிடத்தில் இடி, மின்னல் தாக்கி சேதமடைந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>