×

தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: வீரமாமுனிவரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வரின் கடுமையான முயற்சியால் தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே சிறப்பான மாநிலமாக திகழ்ந்து வருகிறது. விவசாய பொருட்களை அதிக கொள்முதல் மற்றும் விற்பனை, சட்டம் ஒழுங்கு மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சிறப்பாக செயல்படுத்துவதில் இந்தியாவில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை முதல்வர் உருவாக்கியிருக்கிறார்.

அதேபோல் மழை நீர் கடலில் கலப்பதை தவிர்த்து மக்களுக்கு முழுமையாக பயன்படும் வகையில் சிறப்பான நீர் மேலாண்மை மேற்கொண்டதன் காரணமாக நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழகம் தேர்வாகியுள்ளது. வேல் யாத்திரையை பொறுத்தவரையில் கொரோனா காலம் என்பதால் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்த தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு அழுத்தம் தெரிவித்து வரும் நிலையில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார். வரும் சட்டமன்ற தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் அதிமுக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதனால் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிசுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags : Jayakumar ,Tamil Nadu , Coalition rule in Tamil Nadu? Interview with Minister Jayakumar
× RELATED அதிக அளவில் மக்களை வாக்களிக்க வைக்க...