×

தீபாவளிக்கு இன்னும் 5 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் கடை வீதிகளில் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம்: தி.நகர், புரசைவாக்கம் திக்குமுக்காடியது; மாஸ்க் அணியாதவர்களுக்கு அபராதம்; பாதுகாப்பு பணியில் போலீசார் குவிப்பு

சென்னை: தீபாவளிக்கு பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் நேற்று கூட்டம் அலைமோதியது. சென்னை தி.நகர், புரசைவாக்கம் மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடியது. முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். தீபாவளி பண்டிகை வருகிற 14ம் தேதி (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஒரு மாதத்துக்கு முன்பே மக்கள் தீபாவளி பர்சேஸை தொடங்கினர். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் தீபாவளி விற்பனை களை கட்டியது.

சென்னையை பொறுத்தவரை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் நேற்று காலையிலேயே சென்னையை நோக்கி படையெடுக்க தொடங்கினர். ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பொருட்களை வாங்க மக்கள் சென்னைக்கு வர தொடங்கினர். இதனால் தி.நகர், புரசைவாக்கம், பழைய வண்ணாரப்பேட்டை, பிராட்வே, பாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது. கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான மக்கள் அனைவரும் மாஸ்க் அணிந்து வந்திருந்ததை காண முடிந்தது.

அது மட்டுமல்லாமல் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களை போலீசார் தடுத்து எச்சரித்தனர். முகக்கவசம் அணிந்த பின்னரே அவர்களை பஜார் வீதிகளில் நுழைய அனுமதித்தனர். அதையும் மீறி முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் கடைக்குள் நுழைபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. மேலும் மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. கைகளில் சானிடைசர் அடித்த பின்னரே உள்ள செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கடைகளில் தேவையான பேன்ட், சர்ட், சுடிதார், ஜீன்ஸ், சேலை, வேஷ்டி உள்ளிட்ட துணிமணிகளை மக்கள் ஆர்வமாக தேர்ந்தெடுத்தனர். தலை தீபாவளி கொண்டாடும் தம்பதியர்களின் உறவினர்கள் அதிக அளவில் ஆடைகளை வாங்கிய காட்சியையும் காண முடிந்தது. மேலும் நகைக்கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. மாலை 4 மணிக்கு மேல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. ஒரே நேரத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் திரண்டதால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் மக்கள் வெள்ளத்தில் குலுங்கின. மேலும் பொருட்களை வாங்க பலர் கார், மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் தீபாவளிக்காக இயக்கப்பட்ட மாநகர சிறப்பு பேருந்துகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அது மட்டுமல்லாமல் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் கண்ணாடி வளையல், கம்மல், கேர் பின், கவரிங் நகைகள், லிப்ஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தேர்ந்தெடுத்தனர். பொதுமக்கள் அலைமோதியதால் பாதுகாப்பு மற்றும் வழிப்பறி, திருட்டு சம்பவங்களை தடுக்க தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் ஆங்காங்கே உயர் கோபுரங்கள் அமைத்து பைனாகுலர் மூலம் கூட்டத்தை கண்காணித்தனர்.

இது தவிர, சாதாரண உடை அணிந்த போலீசார் மக்களோடு, மக்களாக சென்றவாறு பாதுகாப்பு அளித்தனர். ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. தி.நகரில் மட்டும் கண்காணிப்புக்காக 300க்கும் மேற்பட்ட சிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. இரண்டு டிரோன் கேமிரா மூலமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் சாலையின் இருபுறமும் கயிறுகளை கட்டி கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர். தீபாவளி நெருங்கி வருவதால் வரும் நாட்களில் கூட்டம் இன்னும் அதிகமாக வர வாய்ப்புள்ளது. இதனால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதே போல சென்னை தீவுத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசு விற்பனையும் மும்முரமாக நடந்தது.

Tags : streets ,Deepavali ,Tamil Nadu , With only 5 days left for Deepavali, people are flocking to shop streets across Tamil Nadu to buy goods. Fines for not wearing masks; Concentration of police on security duty
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...