×

கொட நாடு கொலை - கொள்ளை சம்பவம் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை..!! மு.க.ஸ்டாலின் விமர்சனம்

சென்னை: ஜெயலலிதா வீட்டிலேயே கொலை - கொள்ளை நடந்ததுதான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மிகப்பெரிய சாதனை என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று நீலகிரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற தமிழகம் மீட்போம் - 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சிறப்புப் பொதுக் கூட்டத்தில் காணொலி வாயிலாகத் தலைமையேற்றுப் பேசியதாவது; மக்களுக்குத் துன்ப துயரம் ஏற்பட்டால் திமுகதான் முதலில் துடிக்கும். துணையாக நிற்கும். அந்தத் துயரம் துடைக்கப்படும் வரை பணியாற்றும். மக்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் அதிமுக கண்டு கொள்ளாது. அதனைக் கவனிக்காது.

இதுதான் அதிமுக. இதை நாட்டு மக்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுக் காலத்தில் எதுவும் நடக்கவில்லை. அதிமுகவுக்குள் நடந்த குழப்பங்கள், அதிகார வெறியில் நடந்த பதவிச் சண்டை காட்சிகளைத் தான் தமிழ்நாடு பார்த்ததே தவிர வேறு எதையும் பார்க்கவில்லை. 2011-ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தார். அவர் வந்ததுமே பெங்களூருவில் சொத்துக் குவிப்பு வழக்கும் வேகம் பிடித்தது. 2013-ம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக குன்ஹா நியமிக்கப்பட்டார். அதுவரை நீதிமன்றத்துக்குப் போகாத ஜெயலலிதா அங்கு தொடர்ச்சியாகச் சென்று வாக்குமூலம் கொடுத்தார்.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நான்கு பேருக்கும் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்டது. சிறைக்குப் போனார். இதனால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் ஆனார். ஜாமீனில் வெளியில் வந்த ஜெயலலிதா வீட்டுக்குள் முடங்கி இருந்தார். 2015-ம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் விடுதலை செய்யப்பட்ட ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தார். அதில் இருந்தே உடல் நலம் குன்றினார். மருத்துவ சிகிச்சையில் இருந்தார். 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பன்னீர்செல்வம் தற்காலிக முதல்வர் ஆக்கப்பட்டார். டிசம்பரில் ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்திலேயே வருமான வரிச் சோதனை நடந்தது. துணை ராணுவப்படை தலைமைச் செயலகத்தில் நுழைந்தது. 2017-ம் ஆண்டு பன்னீர்செல்வம் பதவி விலகினார். சசிகலா முதல்வராக நினைத்தார். ஆனால், நீதிமன்றத் தீர்ப்பால் அவர் சிறைக்குப் போனார். பழனிசாமி முதல்வர் ஆனார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பன்னீர்செல்வம் சொன்னார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரிச் சோதனை நடத்தியது. வாக்காளர்களுக்கு ரூ.89 கோடியைப் பிரித்துக் கொடுக்க முதல்வர் பழனிசாமி உள்பட 8 அமைச்சர்கள் திட்டமிட்டதற்கான ஆவணம் சிக்கியது.

அதிமுக அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்ற 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். சசிகலாவின் சொத்துகள் முடக்கப்பட்டன. போயஸ் கார்டனுக்குள் வருமான வரிச் சோதனை நடத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியை ஊழல் நிறைந்த ஆட்சி என்று சொன்ன பன்னீர்செல்வம், ஒரு வாரத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்தார். 2018 - 2019 - 2020 ஆகிய மூன்று ஆண்டுகளும் எடப்பாடி பழனிசாமியா - பன்னீர்செல்வமா என்ற மோதலில் இரண்டு அணிகளாக கட்சியும் ஆட்சியும் பிரிந்து மோதிக் கொண்டு இருக்கிறார்கள். திடீர் மோதல்கள் - திடீர் சமாதானங்கள் என்று போய்க் கொண்டு இருக்கிறது. இதுதான் கடந்த 10 ஆண்டுகளாக நாம் பார்க்கும் காட்சி.

இவை அனைத்தும் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்கள். இவர்கள் ஆளும்கட்சியாக இல்லாவிட்டால் இதனை நாமோ மக்களோ ஒரு பொருட்டாக மதிக்கப் போவதில்லை. ஆளும்கட்சியாக இருந்து கொண்டு இவர்கள் செய்து கொண்ட தொடர் மோதல் காரணமாக மக்கள் நலன் பின்னுக்குத் தள்ளப்பட்டது. இன்னும் சொன்னால் மக்களை மறந்தே போனார்கள். முதல் ஐந்து ஆண்டு காலம் சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் ஜெயலலிதா. அடுத்த ஐந்து ஆண்டு காலம் தங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள மக்களை மறந்தார் பழனிசாமி. அதனால்தான் பத்தாண்டுக் காலத்தில் தமிழகம் பெரும் பாதாளத்துக்குத் தள்ளப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : murder - robbery incident ,Goda Nadu ,Edappadi Palanisamy ,MK Stalin , Goda Nadu murder - robbery incident is the biggest achievement of the Edappadi Palanisamy regime .. !! Criticism of MK Stalin
× RELATED கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம்.....