காவிரியை புனித நதியாக அறிவிக்க வேண்டி குடகு மலையில் தொடங்கிய யாத்திரை பூம்புகார் வந்தது: கடலில் புனிதநீர் விட்டு சிறப்புபூஜை

சீர்காழி: காவிரியை புனித நதியாக அறிவிக்ககோரி குடகுமலையில் தொடங்கிய யாத்திரை பூம்புகாரில் நிறைவடைந்தது. குடகு மலையில் உற்பத்தியாகி பூம்புகார் வரை பாய்ந்தோடி கடலில் சங்கமிக்கும் காவிரி நதி தமிழக மக்களின் வாழ்வாதாரமாகும். கங்கை நதியை போல தென் கங்கை என புகழப்படும் காவிரியின் புனிதத்தை பாதுகாக்க வேண்டி ஆண்டுதோறும் ஐப்பசி மாதத்தில் காவிரித்தாய் வழிபாடு, யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடமும் கடந்த மாதம் அக்டோபர் 21ம் தேதி குடகுமலையில் புறப்பட்ட யாத்திரை நேற்று (7ம் தேதி) பூம்புகார் வந்தடைந்தது. யாத்திரையானது குடகு மலையில் துவங்கி ஒக்கேனக்கல், ஈரோடு, கரூர், தஞ்சை, மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் நிறைவடைந்தது.

காவிரி கடலில் சங்கமிக்கும் கடற்கரையில் சிறப்பு பூஜைகளும், மகா ஆரத்தியும் புனிதநீர் கடலில் விடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது தொடர்ந்து, காவிரி நதியை மலடாக்கி வரும் மணல் திருட்டை தடை செய்ய வேண்டும். காவிரியில் சாயக்கழிவுகளோ, சாக்கடை கழிவுகளோ கலப்பதை தடுக்க வேண்டும். காவிரிக்கரையில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கங்கையைப் போல காவிரியையும் புனித நதியாக அறிவிக்க வேண்டும், காவிரியின் தூய்மையை பாதுகாக்க சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்த யாத்திரையில் மன்னார்குடி சென்டலங்கார ஜீயர் சுவாமிகள், அகில பாரத சன்னியாசிகள் சங்க தலைவர் ராமாநந்தா சுவாமிகள், பொதுச்செயலாளர் ஆஸ்மானந்தா சுவாமிகள், துணைத்தலைவர் வேதானந்தா சுவாமிகள், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன், மாவட்ட இளைஞரணி செயலாளர் தனசேகரன், சேவாபாரதி மாவட்ட நிர்வாகி மும்மூர்த்தி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவி மற்றும் துறவியர் பெருமக்களும், ஆதீன கர்த்தர்களும், சிவனடியார்களும், விவசாயிகளும், பெண்களும் பெருமளவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அருள்வீரானந்த கிரி சுவாமிகள் செய்திருந்தார்.

Related Stories:

More
>