×

சரக்கு முனையமாக மாற்றப்பட்டது புதுப்பொலிவுடன் கங்கைகொண்டான் ரயில் நிலையம்

நெல்லை:  நெல்லை அருகே கங்கைகொண்டான் ரயில் நிலையம் தற்போது மெருகூட்டப்பட்டு சரக்கு முனையமாக காட்சியளிக்கிறது. நெல்லை ரயில் நிலையத்தில் தற்போது இறக்கப்பட்டு வரும் அரிசி, உர மூடைகள் விரைவில் கங்கைகொண்டான் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட உள்ளது. தென்மாவட்டங்களில் இரட்டை ரயில்பாதை பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. மதுரை- நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை பணிகளை வரும் 2022ம் ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இருப்பினும் நிலம் கையகப்படுத்துதல், பெரிய பாலங்கள் அமைத்தல் ஆகியவற்றில் காணப்படும் தாமதம் காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.மணியாச்சி - தூத்துக்குடி வரையிலான ரயில் பாதை திட்டத்தில் முதற்கட்டமாக மணியாச்சி தட்டப்பாறை இடையேயான 16 கி.மீ. தொலைவுக்கு இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவு செய்யப்பட்டு, ரயில் சோதனை ஓட்டமும் முடிந்து விட்டது.
அதேபோல் மணியாச்சி முதல் கங்கைகொண்டான் இடையே 16 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நிறைவு பெற்று சோதனை ரயில் இயக்கப்பட்டு விட்டது. கங்கைகொண்டான் தொடங்கி நெல்லை வரை தற்போது இரட்டை ரயில் பாதை பணிகள் சூடுபிடித்துள்ளன.

இந்நிலையில் இரட்டை ரயில்பாதை பணிகள் நடந்த இடங்களில் ரயில் நிலையங்களை செம்மைப்படுத்தும் பணிகளிலும் தெற்கு ரயில்வே இறங்கியுள்ளது. அதில் முதலிடம் பெறுவது கங்கைகொண்டான் ரயில் நிலையமாகும். இங்கு சரக்கு ரயில் முனையமும் அமைக்கப்படுவதால் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  கங்கை கொண்டான் ரயில் நிலையத்தை சாதாரண நாட்களில் 20க்கும் மேற்பட்ட ரயில்கள், சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. நெல்லைக்கும், மணியாச்சிக்கும் நடுவில் காணப்படும் இந்த ரயில் நிலையத்தில் சரக்குகளை கையாள்வதும் எளிதாக உள்ளன. எனவே கங்கைகொண்டான் ரயில் நிலையத்தை சரக்கு முனையமாக மாற்றி அமைத்ததோடு, அங்கு பயணிகளுக்கு தேவையான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கொரோனா காலத்தில் ரயில்கள் இயக்கம் நிறுத்தப்பட்டதால் கங்கைகொண்டானுக்கு சரக்கு ரயில்களை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டது.

தற்போது ரயில்கள் வரத்து சீரடைந்து வரும் நிலையில், விரைவில் அங்கு சரக்கு ரயில்கள் மாற்றப்பட உள்ளன. இதுகுறித்து நெல்லை ரயில் பயணிகள் சங்க நிர்வாகி தியாகராஜநகர் செல்வக்குமார் கூறுகையில், ‘‘நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தின் மேற்கு பகுதி கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சரக்குகளை ஏற்றி
வரும் லாரிகள் புரம் சாலையில் இருபக்கங்களையும் அடைத்து கொள்கின்றன. இதனால் மாநகரில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. எனவே நெல்லையில் உள்ள குட்ஷெட்டை வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை விடுத்து வந்தோம்.

தற்போது கங்கைகொண்டான் ரயில் நிலையம் சரக்கு முனையமாக மாறுகிறது. இனிவரும் காலங்களில் அரிசி, கோதுமை, உர மூடைகள் கங்கைகொண்டானில் இறக்கப்பட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படும். பெட்ரோல், டீசல் மட்டும் நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் வந்து சேரும். சிப்காட் தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருட்களும் கங்கைகொண்டானில் வந்து இறங்க வாய்ப்புகள் உள்ளன’ என்றார். சரக்கு முனையம் என்ற அந்தஸ்தை தவிர்த்து கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் பல்வேறு கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக அதன் முகப்பு பகுதி விமான நிலைய சாயலில், மெருகூட்டப்பட்டுள்ளது. அங்கு டிஜிட்டல் அறிவிப்பு பலகைகள், கூடுதல் டிக்கெட் கவுன்டர்கள், அதிநவீன கட்டுப்பாட்டு அறை, வாகன நிறுத்தங்கள் உள்ளிட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் மொத்தம் 6 டிராக்குகள் போடப்பட்டு, ஒரு நடைமேடையில் இருந்து பயணிகள் அடுத்த நடைமேடைக்கு பயணிக்க நடை மேம்பாலங்களும் போடப்பட்டுள்ளன. ரயில் நிலையத்தின் பிளாட்பார்ம்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியாக சாய்வுதள இணைப்புகளும் செய்யப்பட்டுள்ளன. இதனால் கங்கைகொண்டான் சுற்றுவட்டார பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Tags : Gangaikonda ,railway station ,freight terminal , Freight point, Pudupoli, Gangaikondan, railway station
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!