தோனிமடுவு திட்டம் நிறைவேறுவது எப்போது? : பவானி, அந்தியூர் விவசாயிகள் எதிர்பார்ப்பு

ஈரோடு:  பவானி, அந்தியூர் விவசாயிகளின் நீண்ட நாள் கனவு திட்டமான தோனிமடுவு திட்டத்தை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியதண்டா வனப்பகுதியில் தோனிமடுவு பள்ளம் ஓடுகிறது. இப்பள்ளத்தில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து செல்லும் தண்ணீர், காவிரி ஆற்றில் கலந்து மேட்டூர் அணைக்கு வருகிறது. தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே அணை கட்டினால் சேலம் மாவட்டம் கொளத்தூர், ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி ஆகிய தாலுகாவில் உள்ள 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு மேல் பாசன வசதி பெறும். இத்திட்டம் தொடர்பாக முதன்முதலில் 1971ம் ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக விரிவான திட்ட அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. ஏறக்குறைய 50 ஆண்டுகளாகியும் இன்னமும் இத்திட்டம் நிறைவேறாமல் உள்ளது. இத்திட்டத்தை 3 வழிகளில் நிறைவேற்ற முடியும் என கண்டறியப்பட்டது. அதாவது வாய்க்கால் வெட்டி கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் உள்ள 67 ஏரிகள், 91 குளங்கள், 172 தடுப்பணைகளில் நீரை நிரப்புதல் அல்லது குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வருவது.

இந்த இரண்டு திட்டங்களும் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்றால், தோனிமடுவு என்ற இடத்தில் தடுப்பணை கட்டி தண்ணீரை பள்ளம் வெட்டி குண்டம் பள்ளத்தோடு இணைத்து அதில் இருந்து அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளுக்கு கொண்டு வர முடியும். இத்திட்டத்தை 3 வழிகளில் நிறைவேற்ற வாய்ப்புகள் உள்ள போதிலும், தமிழக அரசு எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டி உள்ளனர். இத்திட்டம் நிறைவேறும் பட்சத்தில் அந்தியூர் தாலுகாவில் கிட்டம்பட்டி ஏரி, ஜரத்தல், முரளி, மூலையூர், எண்ணமங்கலம், கெட்டிசமுத்திரம், சந்தியாபாளையம், அந்தியூர், வேம்பத்தி ஆகிய ஏரிகளும், பவானி தாலுகாவில் கரடிப்பட்டியூர் ஏரி, பட்லூர், ஜம்பை, பூனாச்சி, ஆப்பக்கூடல் ஆகிய ஏரிகள் பயன்பெறும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திட்டத்தை மத்திய அரசின் பங்களிப்புடன் நிறைவேற்றும் பட்சத்தில், மாநில அரசுக்கான நிதிச்சுமையும் வெகுவாக குறையும் என்பதால், தமிழக அரசு இத்திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக அந்தியூர், பவானி ஆகிய தாலுகாவில் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் குருநாதன் கூறியதாவது: தோனிமடுவு திட்டம் என்பது அந்தியூர், பவானி பகுதி விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையாகும். பவானி, அந்தியூர் தொகுதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பு ஆகியவை பிரதான தொழிலாகும். சென்னம்பட்டி பகுதியில் பயிரிடப்படும் வாழையானது மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அதிக அளவில் அனுப்பப்பட்டு வந்தது. ஆனால் போதிய மழை இல்லாததால், நிலத்தடி நீர் மட்டம் சரிந்து இன்று வானம் பார்த்த பூமியாக மாறி வருகிறது. விவசாயிகள் மாற்றுத்தொழிலை நோக்கி செல்லும் நிலை உருவாகி விட்டது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில், தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் கொளத்தூர், அந்தியூர், பவானி ஆகிய பகுதிகளில் 6 லட்சம் மக்கள் பயன்பெற முடியும்.

இது தவிர வனப்பகுதி செழிப்படையும் என்பதோடு, 1.50 லட்சம் கால்நடைகள், வனவிலங்குகளுக்கும் பயனுள்ளதாக இத்திட்டம் இருக்கும். இத்திட்டத்தை நிறைவேற்றக்கோரி தோனிமடுவு பாசன விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து போராடி வருகின்றனர். தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சியினரின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு முறையும் தவறாமல் இடம் பெறும் இத்திட்டமானது இன்றுவரை நிறைவேறாமல் இருப்பது விவசாயிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

திட்டம் நிறைவேற்றப்படுவது தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதால் திட்ட மதிப்பீடு ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டே வருகிறது. சில லட்சங்களில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டிய இத்திட்டம், தற்போது ரூ.150 கோடி அளவுக்கு செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றுவது போல தோனிமடுவு திட்டத்தையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பாக விரைவில் விவசாயிகள், பொதுமக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு குருநாதன் கூறினார்.

Related Stories:

>