×

பெரியாறு பாசன நிலம் பாதுகாக்கப்படுமா? ‘விலை நிலங்களாக’ மாறி வரும் 10 ஆயிரம் ஏக்கர் ‘விளைநிலங்கள்’

மதுரை: பழங்காலம் முதல் எப்போதுமே மதுரைக்கான இயற்கை அழகு அற்புதமானது. இந்த மதுரை மாவட்ட பகுதிகள் எங்கும் பசுமை போர்த்திக் கிடக்கிற வேளாண் பெருமை கொண்டிருக்கிறது. அதனால்தானோ என்னவோ, அக்காலம் முதலே, இந்நகரத்தை ‘பெரிய கிராமம்’ என்றே வர்ணிப்பதுண்டு. வேளாண் தொழில் மேலோங்கிய மதுரை மாவட்டத்தில், தற்போது வேளாண் நிலங்கள் சுருங்கி வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மாவட்டத்தில் முல்லை பெரியாறு, வைகை, குண்டாறு, சாத்தையாறு போன்ற பாசனத்தை நம்பியே பெரும்பாலான வேளாண் நிலங்கள் உள்ளன. இதில் பிரதான பெருமையாக பெரியாறு பாசன ஆயக்கட்டு  ஆண்டுக்கு இருபோகம் நெல் விளையும் பூமி 43 ஆயிரம் ஏக்கருக்கும், ஒருபோக பாசன ஆயக்கட்டு மேலூர் பகுதிகளில் 85 ஆயிரம் ஏக்கருக்கும், திருமங்கலம் கால்வாய் பாசனத்தில் 15 ஆயிரம் ஏக்கருக்கும் நிலங்கள் இருக்கின்றன.

கடந்த சில ஆண்டுகளாக பொய்த்து வரும் பருவமழையால், பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்க அனுமதி இருந்தும், தண்ணீர் தேக்குவதென்பது கனவாகவே தொடர்கிறது. இதனால் ஆண்டுக்கு இருபோக நெல் சாகுபடிக்கு தண்ணீரின்றி, பெரும்பாலும் ஒருபோகம் மட்டுமே விளைச்சல் காணும் நிலை தொடர்கிறது. இந்த ஒரு போகத்திற்கே தண்ணீர் பற்றாக்குறை தொடர்வதும் வேதனையானது. பல நேரங்களில் இருபோக விவசாயமும் பொய்த்து, வறட்சி தலை தூக்கும் கொடுமையும் நிகழ்ந்து விடுகிறது.  இது ஒருபுறமிருக்க, சுற்றுவட்டார கிராமங்களில் இருப்போர், வெளிமாவட்டத்தினர் வேலை வாய்ப்பு, வசதிகள் கருதி நகரைச் சுற்றிய பகுதிகளில் குடியேறி வருகின்றனர். நாளுக்கு நாள் நகரைச் சுற்றிய பகுதிகளை நாடி வரும் மக்கள்தொகை பெருக்கத்தாலும், புறநகர் பகுதிகள் விரிவாக்கம் கண்டு,  விளைநிலங்கள் எல்லாம் கல் ஊன்றப்பட்டு, கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்து ‘விலை நிலங்களாக’ மாறி வருவதும் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் வேளாண் துறையினர் மாவட்டத்தின் பெரியாறு இரு போக ஆயக்கட்டு பகுதிகளில் நடத்திய ஆய்வுகள், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசுமை வயல்வெளிகள் சுருங்கி வருவது கண்டறியப்பட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மேலும், மதுரை மாவட்டத்தில் இருந்த 380 பாசன கண்மாய்களில், பெரியாறு, வைகை பாசன பகுதியில் 210 கண்மாய்கள் இருந்தன. நகருக்குள் இருக்கும் வண்டியூர், மாடக்குளம், செல்லூர், கொடிக்குளம், கோசாகுளம், பரசுராம்பட்டி, நாகனாகுளம், திருப்பரங்குன்றம் தென்கால், முத்துப்பட்டி, நாராயணபுரம். அயன்பாப்பாகுடி, அவனியாபுரம், தல்லாகுளம் கண்மாய்களில் ஒரு பகுதியோ, பெரும்பகுதியோ மாயமாகி விட்டன. இந்த கண்மாய்களை நம்பிய பெரும்பாலான பாசன நிலங்கள் பிளாட் போட்டு வீடுகளாக, கட்டிடங்களாக மாறியுள்ளன.

வெற்றிலை விளைச்சலில் உச்சம் தொட்டுக்கிடந்த சோழவந்தானில், தற்போது வெற்றிலை கொடிக்கால் தோட்டங்கள் மிகச் சுருங்கி வருகிறது.  நான்கு வழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களுக்கெனவும் வீடு, வணிக கட்டிடங்கள் கட்டுமானங்களாலும் பெரும்பகுதி தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு விட்டன. விளைநிலங்கள் அழிப்பு

* மதுரை மாவட்ட பெரியாறு இருபோக ஆயக்கட்டு பகுதி வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘மதுரை மாவட்டத்தில் பேரணை துவங்கி கள்ளந்திரி மதகு வரையிலும் இருபோக ஆயக்கட்டு நிலங்கள் இருக்கின்றன. இந்த நிலங்களின் தற்போதைய நிலை குறித்த சமீபத்திய ஆய்வு அதிர்ச்சியைத் தருகிறது. மதுரை நகரில் இருந்து அழகர்கோவில் வரை 22 கி.மீ தூர சாலையில் பெரும்பகுதி கான்கிரீட் வீடுகளே முளைத்துள்ளன. நத்தம் சாலையில் சத்திரப்பட்டி வரை கடந்தும் வீடுகளாகி விட்டன. மேலூர் ரோட்டில் சிட்டம்பட்டியை தாண்டி விளைநிலங்கள் எல்லாம் கான்கிரீட் கட்டிடங்களாகவே காட்சியளிக்கின்றன.

வாடிப்பட்டி சாலை, அலங்காநல்லூர் சாலை, சிவகங்கை சாலையில் கருப்பாயூரணி தாண்டி புதுதாமரைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நெல் விளையும் வயல்வெளிகள், தோட்டங்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டு விட்டன. ஆங்காங்கே ஒரு சில வயல்வெளிகளும், அவற்றிலும் பல தரிசு நிலமாகவே காட்சியளிக்கின்றன. எங்கு பார்த்தாலும் வீடுகள், வர்த்தக கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள் என மாறிப்போயிருக்கின்றன.  இதன்படி குறைந்தது 10 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக வயல்வெளிகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. உடனடியாக மதுரை மாவட்ட விவசாயிகளுக்கென கூடுதல் சிறப்பு திட்டங்களை அரசு அறிவி–்ப்பது அவசியம். அத்தோடு, தரிசு நிலங்களை சீரமைத்து வேளாண் நிலங்களாக மாற்றும் நடவடிக்கைகளிலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும். இதுதவிர, வாய்க்கால்கள் சீரமைப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம் என அதிரடி நடவடிக்கைகள் வேண்டும்’’ என்றார்.  

பிளாட்களாகும் வயல்வெளிகள்
பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, ‘‘வயல்வெளிகள் பிளாட்களாக மாறி வருவது உண்மைதான். வயல்வெளிகளை பிளாட்களாக மாற்றக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது, இது மீறப்படுகிறது. இதன் மீதான நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் காட்டப்பட வேண்டும்’’ என்றார். நவீன தொழில்நுட்பத்தை அரசு புகுத்த வேண்டும்
மேலூரை சேர்ந்த பெரியாறு வைகை ஒரு போக பாசன விவசாயிகள் சங்க தலைவர் முருகன் கூறும்போது, ‘‘ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். இப்போது தொழிலாளர் பற்றாக்குறை பிரச்னையும் இருக்கிறது. வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்ைல. விளை பொருட்களுக்கு போதிய விலை கிடைக்கவில்லை. நவீன தொழில் நுட்பத்தை புகுந்த அரசு முன் வரவேண்டும். விளை பொருட்களுக்கு போதிய விலை நிர்ணயம் செய்து, விவசாயிகளுக்கு லாபம் கூடுதலாக கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

அடகு வச்ச நகைகளை மீட்க முடியலை
அலங்காநல்லூர் விவசாயி கணேசன் கூறும்போது, ‘‘ஏக்கருக்கு நெல் உற்பத்திக்கு ரூ.25 ஆயிரம்  வரை செலவிடப்படுகிறது. அந்த அளவிற்கு மகசூல் கிடைப்பதில்லை. விவசாய கூலி,  உரம், உழவு உள்ளிட்டவைககளுக்கான செலவு எகிறியுள்ளது. அதற்கேற்ப விலை  கிடைப்பதில்லை. தண்ணீர் பாசனமும் அடிக்கடி பற்றாக்குறை ஏற்பட்டு விடுகிறது.  பலர் நிலத்தை விற்று நகர்ப்பகுதியை நோக்கிச் செல்லும் நிலையும்  இருக்கிறது, நகையை அடகு வைத்து விவசாயம் செய்தாலும் மீட்க முடியாமலேயே  போகிறது’’ என்றார்.

* வாடிப்பட்டி விவசாயி முருகன் கூறும்போது, ‘‘உழுபவன் கணக்குப் பார்த்தால் உலக்கைக்கு கூட மிஞ்சாது என்ற பழமொழி போல விவசாயி தனது வயலில் இறங்கி உழுது கிட்டத்தட்ட 120 நாட்கள் கஷ்டப்பட்டு விளைய வைத்தால் முழுமையான பலன் எடுப்பது கேள்விக்குறிதான், அப்படியே விளைவித்தாலும் அதனை விற்று பணமாக்கி போட்ட முதலை எடுப்பது மிகவும் கடினமாக உள்ளது அரசு, விவசாயத்திற்கும், விவசாயிகள் மீதும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்’’ என்றார்.

Tags : Periyar ,land ,farmland ,price lands , Periyar Irrigation, Protected, as Price Lands, 10 Thousand Acres, Arable Lands
× RELATED முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்திய...