×

நீர்வழித்தடங்கள் ஆக்கிரமிப்பு குளங்கள் காய்ந்துபோகும் அபாயம்

கோவை அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகி, கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு நீராதாரத்தை வழங்குகிறது நொய்யல் ஆறு. இதை ஆதாரமாக கொண்டு கோவை மாவட்டத்தில், உக்கடம் பெரியகுளம், புதுக்குளம், கோளராம்பதி, நரசிம்பதி, பேரூர் பெரியகுளம், செங்குளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணம்பதி குளம், பள்ளபாளையம் குளம், கோனூரம்பட்டி குளம், குறிச்சி குளம், வெள்ளலூர் குளம் உள்ளிட்ட 25 குளங்கள் உள்ளன. கோவை மாவட்டத்தில், வேளாண் சாகுபடிக்கும், நிலத்தடி நீருக்கும், வீடுகளில் உபயோகித்து வரும் ஆழ்குழாய் தண்ணீர் போன்றவற்றுக்கு, குளத்து நீரே முக்கிய ஆதாரமாக உள்ளது. தென்மேற்கு, வடகிழக்கு என பருவமழை காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் சிறு, சிறு ஓடைகள் மூலமாக நொய்யல் ஆற்றில் கலந்து, கால்வாய்களாக பிரிந்து, குளங்களை அடைகிறது. இவ்வாறு நிரம்பும் குளங்கள், கோடை காலங்களில் உயிர்ப்பித்துக்கொண்டு, அடுத்த பருவ மழை வரை தாக்குப்பிடிக்கின்றன.

குளங்களில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வற்றாமல் இருக்க முக்கிய காரணம், குளங்களுக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் ஆகும். இவை, ஆக்கிரமிப்பு இன்றி, பாதுகாப்பாக இருந்தால், எந்த குளமாக இருந்தாலும், எளிதில் நிரம்பி விடுகிறது. இக்கால்வாய்களின் கரைகள் ஆக்கிரமிக்கப்படும்போது, குளத்துக்கு நீர்வரத்து தானாக குறைந்து விடுகிறது. அல்லது திசை மாறி சென்று விடுகிறது. இதன் காரணமாக, குளம் காய்ந்துபோகும் நிலை ஏற்படுகிறது. தற்போது, வெள்ளலூர் குளம், கோளராம்பதி குளம், புதுக்குளம், பேரூர் பெரியகுளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து குறைவாக உள்ளது. காரணம், நீர்வரத்து கால்வாய்களில் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள்தான். இவ்வகை ஆக்கிரமிப்பு காரணமாக, உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம், வாலாங்குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட நகர்ப்புற குளங்களுக்கும் நீர்வரத்து தடைபடுகிறது. வழக்கமான அளவைவிட குறைவான அளவே தண்ணீர் வருகிறது.

கோவை மாநகரை ஒட்டியுள்ள குளங்களில், 9 குளங்களை மாநகராட்சி நிர்வாகம், பொதுப்பணி துறையிடமிருந்து குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறது. மேலும் பொதுப்பணி துறை சார்பாக கோவை மாவட்டத்தில் சுமார் 25 குளங்கள் பராமரிக்கப்படுகிறது. இதில், எந்த குளங்களும் தப்பவில்லை. அனைத்திலும் ஆக்கிரமிப்பு தொடர்கிறது. நொய்யல் ஆற்றில் இருந்து சித்திரைச்சாவடி வாய்க்கால், குனியமுத்தூர் வாய்க்கால், சேத்துமா வாய்க்கால், குறிச்சி வாய்க்கால் மற்றும் வெள்ளலூர் ராஜ வாய்க்கால் வழியாக குளங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

இக்குளங்கள்தான் மாநகர் பகுதியின்  முக்கிய நிலத்தடி நீராதாரமாக உள்ளன. குடிநீரை தவிர்த்து இதர தேவைகளுக்கு  இவை பயன்படுகின்றன. கோவை உக்கடம் பெரியகுளத்தின் பரப்பளவு 327 ஏக்கர். இந்த  குளத்தில் நீர் நிரம்பியதும் அது வாலாங்குளத்திற்கு செல்கிறது.  வாலாங்குளத்தின் பரப்பளவு 160 ஏக்கர் ஆகும். இதனை சுற்றியுள்ள 5 கி.மீ.  தூரம் போர்வெல்கள் இந்த குளத்து நீரை ஆதாரமாக கொண்டு இயங்குகின்றன. ஆக்கிரமிப்புகளால்  கோவை குளங்களின் பரப்பளவு மற்றும் நீர்வரத்து கால்வாய் அளவு சுருங்கி  வருகிறது. கட்டிட கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டும் இடமாகவும்,  சாக்கடைநீர் கலக்கும் இடமாகவும் குளங்கள் மாறி வருகின்றன. இதனால்  நீர்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, நீர்  தேவைகளுக்காக கோவை பகுதி மக்கள் பரிதவிக்கின்றனர்.

ஆக்கிரமிப்பு மட்டுமின்றி, நீர்வழிப்பாதைகள் போதிய பராமரிப்பின்றி முட்புதராக காட்சி தருகின்றன. இதன் காரணமாக, குளங்களுக்கு தண்ணீர் வரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. கோவை மாநகர் மட்டுமின்றி, புறநகர்  பகுதிகளில், அன்னூர், கிணத்துக்கடவு, பேரூர், மதுக்கரை, மேட்டுப்பாளையம்  ஆகிய பகுதிகளிலும் குளம், குட்டை மற்றும் வாய்க்கால்கள் பராமரிக்கப்படாமல்  உள்ளன. மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்வரத்து பாதைகளையும், குளங்களையும் பாதுகாக்க வேண்டும்.
 இல்லையேல் குளங்கள் பாலைவனமாக மாறிவிடும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை காத்து, குளம் மாசுப்படுவதை தடுத்து, வருங்கால தலைமுறையை பாதுகாக்க வேண்டும் என்பதும் அவர்களது கருத்தாக உள்ளது. இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிசாமி கூறியதாவது:

மழைக்காலத்தில் குளம், குட்டைகளில் தண்ணீர் சேமிப்பால், சுற்றுப்புற பகுதிகளில் விவசாயம் மேம்படுகிறது. நிலத்தடி நீராதாரமும் வளம் பெறுகிறது. தற்போது, நீர்வழி ஓடைகள், குளம், குட்டைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. நீர்வழித்தடங்கள், குளம், குட்டைகள் ஆகியவற்றை தூர்வாரி நீர் சேமிக்க சுமார் ரூ.600 கோடி நிதியை மத்திய அரசு, தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில் இருந்து பெரும்பாலான திட்டங்களை கோவை மாவட்டத்தில் செயல்படுத்த வேண்டும். ஏற்கனவே, தமிழக அரசால் கோவை மாவட்ட நீர்வழித்தடங்கள், குளம், குட்டைகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகள், சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், சில அதிகாரிகளின் அலட்சியத்தால் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றமுடியாமல் உள்ளன. இதனால் குளம், குட்டைகள் வரும்காலத்தில் காய்ந்துபோகும் அபாயம் எழுகிறது. இவ்வாறு சு.பழனிசாமி கூறினார்.

மாநகராட்சி உயரதிகாரி ஒருவர் கூறுகையில். ‘‘ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவையில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம், செல்வசிந்தாமணி குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்டவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இக்குளங்களின் நீர்வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், குளங்களில் சாக்கடை நீர், கழிவுகள் உள்ளிட்டவை கலப்பதை தடுக்க கழிவு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ராஜவாய்க்கால் நீர்வழித்தடம் தூர்வாரப்பட்டு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன’’ என்றார்.

நகர மறுக்கும் வீடுகள்
உக்கடம் பெரியகுளம் ேமற்கு பகுதி, வாலாங்குளம் வடக்கு பகுதி, செல்வசிந்தாமணி குளம் வடக்கு பகுதி ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு, மாற்று இடம் ஒதுக்கப்பட்டாலும், இன்னும் குளக்கரையில் ஆக்கிரப்பு நீடிக்கிறது. இங்குள்ள வீடுகள் நகர மறுப்பதால், ஸ்மார்ட்சிட்டி பணிகளுக்கு பெரும் இடையூறாக உள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags : Waterways , Waterways, aggression, dryness, danger
× RELATED சென்னை-விளாடிவோஸ்டாக் கடல்வழி சரக்கு...