×

தா.பேட்டையில் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு அமைக்கப்படுமா?

* 50 வருடமாக போராடும் விவசாயிகள்
* கண்டு கொள்ளாத தமிழக அரசு

வெங்காயத்தை உரித்தால் கண்ணீர் வருகிறதோ இல்லையோ... அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் நிலைக்கு ஆளாகியுள்ளனர் நம் தாய்மார்கள். இந்த நிலை எதனால் ஏற்பட்டுள்ளது என உற்று நோக்கினால் வெங்காயத்தை நாம் சேமித்து வைக்கும் அளவிற்கான முயற்சிகளில் போதிய கவனம் செலுத்தவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.  வெங்காய சாகுபடி என்பது ஏழை விவசாயியை உச்சத்திற்கும், உச்சத்தில் இருக்கும் விவசாயியை நடுவீதிக்கும் கொண்டுவந்துவிடும் என அனுபவம் வாய்ந்த விவசாயிகள் கூறுகின்றனர். சரியான விளைச்சலும், விலையும் வெங்காயத்திற்கு கிடைத்துவிட்டால் விவசாயி வறுமையிலிருந்து விடுபட்டு செல்வந்தன் ஆகிவிட முடியும். ஆனால், பருவ சூழலும், விலையும் சரியாக அமையாது போனால் விவசாயி வீதிக்கு வந்து விடநேரிடும் என்கின்றனர்.

 இவ்வாறு வெங்காய சாகுபடியில் மிகுந்த அனுபவம் பெற்ற திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா தா.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த விவசாயிகள் தங்கள் பகுதியில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு வெங்காயம் முதன்மை பதப்படுத்தும் நிலையங்கள் நவீன வசதியுடன் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக தா.பேட்டை ஒன்றியத்தில் ஊரக்கரை, மகாதேவி, ஜம்புமடை, பிள்ளாபாளையம், முத்துராஜாபாளையம், எம்.கருப்பம்பட்டி, கரிகாலி, காருகுடி, வேலம்பட்டி, சாலகாடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.

 ஐப்பசி, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் நடவு செய்யப்படும் வெங்காய பயிர் 80 நாட்களில் பலன் தருகிறது. பனி, தொடர் மழை, பூச்சி தாக்குதல் ஆகியவை வெங்காயத்திற்கு எதிரான தாக்குதல்கள் ஆகும். குறிப்பாக தா.பேட்டை ஒன்றியத்தில் உள்ள மண்வளமும், கொல்லிமலைச் சாரலை ஒட்டியுள்ள பகுதியென்பதால் வெங்காய பயிர் சாகுபடிக்கு ஏற்ற சூழலை தருகிறது. இது குறித்து தா.பேட்டையைச் சேர்ந்த விவசாயி சுரேஷ் என்பவர் கூறும்போது, தா.பேட்டை ஒன்றியம் வானம் பார்த்த பூமியாகும். இப்பகுதி விவசாயிகள் விவசாயத்திற்கு மழைநீர், கிணற்றுப்பாசனம் மற்றும் போர்வெல் தண்ணீரையே நம்பியுள்ளனர். பெரும்பாலான நிலப்பகுதி மானாவாரியாக சாகுபடி செய்யப்படுகிறது. தண்ணீர் இருக்கும் சூழலில் வெங்காயம் பயிரிடப்படுகிறது. தா.பேட்டை ஒன்றியத்தில் சுமார் 800 ெஹக்டர் அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. வெங்காய சாகுபடிக்கு ஏற்புடைய சூழல் நிலவும்போது விளைச்சல் இப்பகுதியில் அதிகரிக்கிறது.  அதேசமயம் விளைச்சல் இருக்கும்போது சில நேரம் உரிய விலை கிடைப்பதில்லை. அதுபோன்ற தருணத்தில் வெங்காயத்தை நவீன வசதிகளுடன் பதப்படுத்தும் கிடங்குகளை வெங்காயம் விளைச்சல் அதிகம் காணும் மகாதேவி, வாளசிராமணி, ஊரக்கரை, பில்லாபாளையம் ஆகிய பகுதிகளில் அமைக்க வேண்டும்.

 தா.பேட்டை வேளாண் விரிவாக்க மைய வளாகத்தில் அமைந்துள்ள வெங்காயம் பதப்படுத்தும் நிலையத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நவீனப்படுத்த வேண்டும். கிடங்கின் வசதி குறித்தும் அதன் பயன்கள் பற்றியும் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை வேளாண் அதிகாரிகள் ஏற்படுத்த வேண்டும். தற்போது வெங்காய விலை உச்சத்தில் இருப்பதற்கு விளைச்சல் காணும் நேரத்தில் வெங்காயத்தை உரிய முறையில் நாம் பாதுகாக்க தவறியதுதான் காரணமாகும். குறிப்பாக விளைச்சல் அதிகமாக இருக்கும்போது விவசாயிகள் தங்களது வயலில் ஒரு பகுதியில் பட்டரை போட்டு தென்னங்கீற்றுகளால் காற்று புகாமல் மூடி பாதுகாத்து வைப்பது வழக்கம். இவ்வாறு வைக்கப்படும் வெங்காயம் சில நேரங்களில் பூஞ்சான் மற்றும் பூச்சி தாக்குதலுக்கு ஆளாகி வீணாகிவிடும். மழைநீர் உள்ளே இறங்கிவிட்டால் வெங்காயம் அழுகிவிடும்.

 எனவே விவசாயிகள் பயன்பெறும் வகையில் தா.பேட்டை ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் வெங்காய சேமிப்பு கிடங்கு நவீன வசதிகளுடன் அமைத்துக் கொடுத்தால் வெங்காய பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். அதே வேளை வெங்காயத்தின் விலை உச்சத்தை தொடாது. வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையும் ஏற்படாது. வெங்காய சாகுபடி உற்பத்தி அதிகரிப்பதோடு விளைவித்த வெங்காயத்தை உரிய முறையில் பாதுகாக்க வேண்டியதும் நமது அரசின் கடமையாகும் என்று கூறினார்.

 வெங்காயம் சாகுபடி விவசாயிகளை பாதுகாப்பதற்கு வேளாண் துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் குறித்து வேளாண் அலுவலர் ஒருவரிடம் கேட்டதற்கு தா.பேட்டை வேளாண் விரிவாக்க மையத்தின் அருகே வெங்காய சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிடங்கில் வெங்காயத்தை தரம் பிரிக்கும் மையம் உள்ளது. விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள வெங்காயத்தை இங்கு கொண்டு வந்தால் விவசாயிகள் விரும்பும் எடையில் சாக்குகளில் நிரப்பி தரப்படுகிறது. இதற்கு முன்பு தா.பேட்டை ஒன்றியத்தில் ஆயிரம் ஹெக்டேர் அளவில் வெங்காய பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெங்காயம் தரம் பிரிக்கும் நவீன இயந்திரம் விவசாயிகளின் நலன் கருதி அமைக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதே வேளை வெங்காய பயிருக்கான காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் தங்கள் சாகுபடி செய்துள்ள வெங்காய பயிர்களை கணக்கில் காட்டி காப்பீடு செய்துகொள்வது பாதுகாப்பானது என்று கூறினார்.

 இதுகுறித்து ஊரகரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி முத்துபிள்ளை என்பவர் கூறும்போது, தா.பேட்டை ஒன்றியத்தில் வெங்காயம் சாகுபடி அதிக அளவு செய்யப்படுகிறது. இப்பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயத்தை பாதுகாத்திடவும், உரிய விலை வரும்போது விற்றுக்கொள்ளும் வகையிலும் வெங்காயம் முதன்மை பதப்படுத்தும் நிலையங்களை பல்வேறு இடங்களில் தா.பேட்டை ஒன்றியத்தில் அமைக்கவேண்டும். இதனால் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெங்காயத்தை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும் நிலை தவிர்க்கப்படும்.

இதனால் விவசாயிகளுக்கு அலைச்சலும், போக்குவரத்து செலவும் மிச்சப்படும். அரசு என்பது லாப நோக்கோடு மட்டும் செயல்படக்கூடாது. சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். அதன் முன் மாதிரியாக தமிழகத்தில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை பாதுகாக்கவும், அதற்கு உரிய விலை விவசாயிகளுக்கு கிடைத்திடும் வகையில் செயல்படவும் பொதுமக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் நியாயமான விலையில் வெங்காயம் கிடைத்திடவும், திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். விளைவித்த வெங்காயத்தை முறையாக எங்களால் பாதுகாக்க முடியாத சூழல் ஏற்படுவதால் பெருமளவு வெங்காயம் பூச்சி தாக்குதலினாலும், பூஞ்சைக்காளான் தாக்குதலினாலும் அழுகி விடுகிறது ஆகிய பாதிப்பினால் பெருமளவு சேதமடைகிறது. ஒரு முட்டை வெங்காயத்தில் 30 கிலோ வெங்காயம் அழுகி வீணாகிறது.

 இதனை தவிர்க்க வெங்காயம் சாகுபடி அதிகம் உள்ள இடங்களில் பதப்படுத்தும் நிலையங்களை கூடுதலாக அமைக்க வேண்டும். இதனால் பதப்படுத்தும் நிலையத்திலேயே விவசாயிகள் தங்கள் வெங்காயத்தை தரம் பிரித்துக் கொள்வதோடு அங்கேயே பேக்கிங் செய்து பாதுகாப்பான முறையில் இருப்பு வைத்திருந்து உரிய விலை கிடைக்கும்போது விற்றுக்கொள்ள முடியும். இதற்கான நடவடிக்கைகளை வேளாண் துறையோடு ஆலோசனை செய்து தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்து தா.பேட்டை ஒன்றியத்தில் குறைந்தபட்சம் 5 இடங்களில் வெங்காயம் முதன்மை பதப்படுத்தும் நிலையத்தை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Dhaka , Will the warehouse be set up in Dhaka?
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!