×

நள்ளிரவில் லாரி நிறைய வந்த கள்ள ஓட்டு

அமெரிக்க அதிபர் தேர்தல் தபால் ஓட்டுகளில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் நடந்த வாக்குப்பதிவுகளில், பெரும்பாலான மாகாணங்களில் அவர் வெற்றி  பெற்றுள்ளார். அதே நேரம், தேர்தலில் பதிவான 10 கோடி தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கிய பிறகுதான், அமெரிக்க தேர்தலின் வெற்றித் தோல்வியை நிர்ணயம் செய்யும் முக்கிய மாகாணங்களில் முடிவுகள் மாறி வருகின்றன.  குறிப்பாக, பென்சில்வேனியா உட்பட சில மாகாணங்களில் முன்னிலை வகித்து வந்த டிரம்ப், தபால் ஓட்டுக்குப் பிறகு பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதனால், ‘வெற்றியை திருடி விட்டர்கள், மோசடி செய்து விட்டார்கள்,’ என புலம்பிக் கொண்டிருக்கும் டிரம்ப், தற்போது, ராணுவ வீரர்கள் போட்ட தபால் ஓட்டுகள் மாயமாகி இருப்பதாக டிவிட்டரில் கூறியிருக்கிறார். இருப்பினும், இதற்கும்  அவர் எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. அதேபோல், ‘அமெரிக்க ராணுவத்தில் கடந்த 2016ல் 2.5 லட்சம் வீரர்கள் வாக்களித்தனர். இம்முறை நிச்சயம் அதை விட அதிகமானோர் வாக்களித்து இருப்பார்கள். அவர்களில் பெரும்பாலானோர்  ஓட்டு மாயமாகி விட்டது. அவற்றையும் கட்டாயம் எண்ண வேண்டும்,’ எனவும் டிரம்ப் டிவிட்டரில் கதறியுள்ளார்.

டிரம்ப்பின் குற்றச்சாட்டை உறுதி செய்வது போல், பென்சில்வேனியா  மாகாணத்தில் உள்ள பிளடெல்பியா வாக்கு எண்ணும் மையத்திற்கு நேற்று  முன்தினம் இரவு ஒரு லாரி நிறைய கள்ள ஓட்டுகளை எடுத்துச் சென்ற 2 பேர் கைது   செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர்களிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல்  செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு இந்த கள்ள ஓட்டுகள் எப்படி கிடைத்தது என்பது புதிராக இருக்கிறது. மேலும், தபால் ஓட்டில்  உண்மையிலேயே முறைகேடு நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தி உள்ளது.

இரவு 8 மணிக்கு மேல் வந்த  தபால் ஓட்டை எண்ண தடை

அதிபர் தேர்தல் வாக்குப்பதிவில் முறைகேடு நடந்ததாக டிரம்ப் தரப்பில் பென்சில்வேனியா உச்ச நீதிமன்றம், மிச்சிகன், ஜார்ஜியா, நெவாடா நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. விஸ்கான்சின் மாகாணத்தில்  மறுவாக்குப்பதிவு கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. பென்சில்வேனியா உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், வாக்குப்பதிவு நடந்த கடந்த 3ம் தேதி இரவு 8 மணிக்குப் பிறகும் ஏராளமான தபால் வாக்குச்சீட்டுகள் வந்ததாகவும்,  வாக்குப்பதிவு முடிந்து 3 நாட்களாக வரும் வாக்குகளும் எண்ணப்படுவதாகவும், சட்ட விரோதமாக போடப்பட்ட இவ்வாக்குகளை எண்ணக்கூடாது எனவும் டிரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சாமுவேல், நவம்பர்  3ம் தேதி வாக்குப்பதிவு நேரம் முடிந்து இரவு 8 மணிக்கு பிறகு வந்த வாக்குச்சீட்டுகளை தனியாக பிரித்து பாதுகாக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் அவற்றை தனியாக எண்ண வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இம்மாகாணத்தில்  முதலில் முன்னிலையில் இருந்த டிரம்ப், தபால் ஓட்டு எண்ணத் தொடங்கியதும், சரிந்து பிடெனை விட 20,000 வாக்குகள் பின்தங்கியுள்ளார்.

ஜார்ஜியாவில்  மறுஎண்ணிக்கை

ஜார்ஜியாவில்  பிடென் - டிரம்ப் இடையே வெறும் 0.5 சதவீத வாக்கு வித்தியாசம் மட்டுமே  உள்ளது. சுமார் 4 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் பிடென் முன்னிலை  வகிக்கிறார். சொற்ப வித்தியாசமே இருப்பதால் ஜார்ஜியாவில் மறுவாக்கு   எண்ணிக்கை நடத்தப்படும் என தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர். இது குறித்து  தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், ‘‘0.5 சதவீத வித்தியாசமே கடைசி வரை  நீடித்தால் மறுவாக்கு எண்ணிக்கைக்கு கோரலாம். ஆனால், இறுதி வாக்கு   எண்ணிக்கை முடிந்து தேர்தல் அதிகாரி சான்றிதழ் அளித்த பிறகே மறுவாக்கு  எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்க முடியும். எனவே இப்போதைக்கு பதிவான வாக்குகள்  எண்ணப்படும்’’ என்றனர்.

Tags : At midnight a lorry with a lot of counterfeit driving arrived
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...