ஐஐடி 51வது ஆண்டு பட்டமளிப்பு விழா: புதுமைகளின் மூலம் ஏழைகளை நன்றாக வாழ வைக்க வேண்டும்: இளைஞர்களுக்கு மோடி வேண்டுகோள்

புதுடெல்லி: `இளைஞர்கள் தங்களின் புதுமைகள் மூலம் ஏழைகள் நன்றாக வாழ பணியாற்ற வேண்டும்,’ என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.  டெல்லியில் நேற்று நடைபெற்ற ஐஐடி மாணவர்களின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் கலந்து கொண்டார். இதில் 2,019 மாணவர்கள் பட்டம், விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில், பிரதமர் மோடி பேசியதாவது:  நாட்டிலுள்ள இளைஞர்கள் தொழில் செய்வதை எளிதாக்க, இந்தியா தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டுள்ளது. இளைஞர்களும் தங்களுடைய அறிவு, அனுபவம், திறமை, புதுமை ஆகியவற்றை கொண்டு கோடான கோடி மக்களின்,  குறிப்பாக ஏழைகள் நன்றாக வாழ உழைக்க வேண்டும். இளைஞர்கள் தரத்தில் கவனம் செலுத்த வேண்டும். அதில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள கூடாது.

இளைஞர்களின் பணி, நமது உற்பத்தி பொருட்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைக்க வழி வகுக்கும். இளைஞர்களே பிராண்ட் இந்தியாவுக்கான விளம்பர தூதர்கள்.  கடந்த 5 ஆண்டுகளில், தொழில் நுட்பம் எப்படியொரு சிறந்த நிர்வாகத்தை அளிக்கிறது, ஏழைகளை சென்றடைகிறது என்பதை பார்த்திருப்பீர்கள். தொழில் நுட்பத்தின் மூலம் ஊழல் செய்யும் எண்ணம் குறைந்துள்ளது. நாம் வாழும் கால கடத்தில் கொரோனா ஏன் வந்தது? என்று அதிருப்தி அடைய கூடாது. வேறு கோணத்தில் சிந்திக்க வேண்டும். பணி இடத்திலும், உலகிலும் புதிய இக்கட்டான சூழலில், அவசரத்துக்கு ஏற்ப நம்மை நாமே மாற்றிக் கொள்ள  கொரோனா கற்று கொடுத்திருக்கிறது. இதனை இந்தியாவின் ஒவ்வொரு மூலை முடுக்குகளிலும் என்னால் பார்க்க முடிந்தது. இதற்கும் தற்சார்பு இந்தியாவுக்கும் நேரடி தொடர்புள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

Related Stories:

More