ஆர்சிபி கேப்டன் கோஹ்லியை மாத்துங்கப்பா...கம்பீர், மஞ்ரேக்கர் வலியுறுத்தல்

புதுடெல்லி: தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் கோஹ்லியை மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் கம்பீர், மஞ்ரேக்கர் வலியுறுத்தியுள்ளனர். இது வரை 13 ஐபிஎல் தொடர்களிலும் விளையாடி உள்ள ஆர்சிபி, ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. 6 முறை நாக் அவுட் சுற்றுக்கும், 3முறை இறுதிப்போட்டிக்கும் முன்னேறியதே அதிகபட்ச சாதனை. அந்த அணியில் 2008ம் ஆண்டு  முதல் விளையாடி வரும் கோஹ்லி, 2013ல் இருந்து 8 சீசன்களாக கேப்டனாகவும் இருக்கிறார். அவர் பங்குக்கு 3 முறை நாக் அவுட் சுற்றுக்கு பெங்களூரை கொண்டு சென்றுள்ளார்.நடப்பு தொடரின் லீக் சுற்றில் 14 போட்டிகளில் விளையாடி தலா 7 வெற்றி, தோல்விகளை சந்தித்து 4வது இடத்தை பிடித்தது ஆர்சிபி. கடைசி 4 லீக் ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றாலும், ரன் ரேட் அடிப்படையில் கொல்கத்தாவை பின்னுக்கு  தள்ளி பிளே ஆப் சுற்றில் நுழைந்தது. அதில் 5வது தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறியுள்ளது.

தொடர் தொடங்குவதற்கு முன்பே  பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லியை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரரும், கொல்கத்தாவுக்காக 2 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற கேப்டனுமான கவுதம் கம்பீர்  வலியுறுத்தினார். இப்போதும் மீண்டும் அதே கருத்தை வலியுறுத்தி உள்ளார். இது குறித்து கம்பீர் நேற்று கூறியதாவது: பெங்களூர் அணிக்கு கேப்டனை மாற்றும் நேரம் வந்து விட்டது. நான் பெங்களூர் அணியின் உரிமையாளராக இருந்தால் கட்டாயம் கேப்டன் பொறுப்பில் இருந்து கோஹ்லியை நீக்கி இருப்பேன். தொடர்ந்து 8 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத  கேப்டனை பதவியில் வைத்திருப்பார்களா? பஞ்சாப் அணியின் கேப்டனாக ஆர்.அஷ்வின் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க முடியவில்லை.  ரோகித் 4 முறையும், தோனி 3 முறையும் கோப்பையை வெல்லாவிட்டால் அவர்களால் கேப்டனாக  தொடர்ந்திருக்க முடியாது. எல்லா வீரர்களுக்கும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.

கேப்டன் என்ற பெருமையை மட்டுமல்ல விமர்சனங்களையும் அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியதை பெருமையாக சொல்ல முடியாது. பிளேஆப் சுற்றுக்கு முன்னேற தகுதியில்லாத அணி அது.  அந்த அணியின் கடைசி 4 ஆட்டங்களை பார்த்தாலே உங்களுக்கு புரியும். ஏதோ  டி வில்லியர்ஸ், நவ்தீப் சைனியால் வெற்றிகளை அவர்கள் ருசித்தார்கள். எட்டு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். கோஹ்லி திறமையான கேப்டன் அல்ல.  நன்றாக விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக அவர் இருக்கிறார்... அவ்வளவுதான்.

லீக் சுற்றில் பரிசோதனை முயற்சிகளை செய்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாக் அவுட் சுற்றில் திடீரென தொடக்க வீரராக அவர் களம் இறங்குகிறார். அப்படி தொடக்க வீரராக களம் இறங்க முதலிலேயே முடிவு செய்திருந்தால்,  ஏலத்திலேயே நடு வரிசையில் விளையாட ஒரு வீரரை தேர்வு செய்திருக்க வேண்டும். எனவே பெங்களூரின் தோல்விக்கு நான்தான் காரணம் என்று கோஹ்லி கைகளை உயர்த்தி பொறுப்பேற்க வேண்டும். அவருக்கு எதிரான மனநிலை ஏதும்  எனக்கு இல்லை. நான் அவர் ஆட்டம் குறித்துதான் பேசுகிறேன். இவ்வாறு கம்பீர் கூறியுள்ளார்.

இதே கருத்தை வலியுறுத்தி உள்ள மஞ்ரேக்கர், ‘சில ஆண்டுகளுக்கு முன்பே பெங்களூர் கேப்டனை மாற்ற வேண்டும் என்று தெரிவித்திருந்தேன். நீண்ட காலமாக ஒருவரே கேப்டனாக இருக்கிறார். நீங்கள் அணியின் சூழ்நிலைகளையும்,  முடிவுகளையும் மாற்ற விரும்பினால் முதலில் கேப்டனை மாற்ற வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அணியின் உரிமையாளர்களுக்கு தான் இழப்பு. மாற்றம் வந்தால் பெங்களூருக்கு நல் வாய்ப்பாக அமையும்’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories:

>